பக்கம்:குமண வள்ளல்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

குமண வள்ளல்

ஆயிற்று? அண்ணா.... அண்ணா.... என் அண்ணா.... கடைசியில் என்னால் உன் உயிருக்குக் கேடு வந்ததா?” ....அவன் புலம்பினான். தான் ஆடா விட்டாலும் தன் சதை ஆடும் என்ற பழமொழி பொய்யாகுமா?

புலவர் இப்போது மெல்லப் பேசத் தொடங்கினார். “அரசே, நான் சொல்வதைச் சற்றுக் கேளுங்கள். நான் தங்கள் தமையனரைக் கொல்ல வில்லை.”

"என்ன? கொல்லவில்லையா? அப்படியானால் இந்த வாள் எவ்வாறு உம்மிடம் வந்தது?" என்று அலறிக்கொண்டு கேட்டான் இளங்குமணன்.

“அவர் உயிரோடுதான் இருக்கிறார். நான் சொல்வதை நிதானமாகக் கேட்டால் எல்லாவற்றையும் சொல்கிறேன். என்ன நடந்தாலும் சரி, இதைச் சொல்லிவிட்டுத்தான் வேறு காரியம் பார்க்கிறது என்று ஓடி வந்திருக்கிறேன். சொல்லட்டுமா?”

“சொல்லும்” என்று பெருமூச்சு விட்டான் இளங் குமணன். அவனுக்கு உண்டான அதிர்ச்சி இன்னும் அடங்கவில்லை.

“உலகத்தில் எதுவும் நிலைத்து நிற்பதில்லை. எதுவும் மன்னாத உலகம் இது. இங்கே சிலர் இறந்தும் இறவாமல் வாழ்கிறாகள். புகழ் ஒன்றுதான் நிற்குமென்பதை அறிந்த சில நல்லோர் அதை இங்கே நிறுவிவிட்டு மாய்ந்து போனார்கள். எவ்வளவோ உயர்ந்த செல்வம் பெற்றவர்களுங்கூட, வறுமை காரணமாகத் தம்மிடம் வந்து இரப்பவர்களுக்குக் கொடுக்காமல் செல்வத்தை வைத்துக்கொண்டு வாழ்ந்து இறந்து போகிறார்கள். அவர்களை உலகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/106&oldid=1362794" இலிருந்து மீள்விக்கப்பட்டது