பக்கம்:குமண வள்ளல்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

குமண வள்ளல்

வேறு யாருக்கேனும் தாமே கொய்து தந்தாலும் தருவார் என்றுதான் இதை உறையுடன் கேட்டேன்; கொடுத்துவிட்டார். இனி இவர் தற்கொலை செய்து கொள்ள வழியில்லை என்ற மகிழ்ச்சியோடு இங்கே ஓடி வந்தேன். இத்தகைய பெரிய உள்ளம் படைத்த தர்ம தேவதையை அண்ணனாகப் பெற்ற தங்களுக்கு ஏன் அவர் அருமை தெரியவில்லை என்று கேட்டு விட்டுப் போக வந்தேன். சொல்வதைச் சொல்லி விட்டேன். இந்தாருங்கள், இந்த வாள். இதைக் கொண்டு என்னை ஒறுக்க எண்ணினாலும் நான் ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக இருக்கிறேன்.”

வாளை இளங் குமணன் தன் கையில் வாங்கிக் கொண்டான், கண்ணில் ஒற்றிக்கொண்டான். அவன் உள்ளத்துக்குள் ஏழு கடல்களும் குமுறிக்கொண்டிருந்தன. “புலவரே!” என்று மெல்லப் பேசத் தொடங்கினன். வார்த்தைகள் தொடர்ந்து வெளி வரவில்லை.

தன் அண்ணன் கொலை செய்யப்படவில்லை என்பது தெரிந்த பிறகு அவன் நிதானத்துக்கு வந்தாலும், அவன் உள்ளம் அவனைச் சுட்டது. புலவர் கூறிய உருக்கமான நிகழ்ச்சி அவனையும் பாகாய், உருக்கி விட்டது.

“புலவரே, எனக்கு ஓர் உபகாரம் செய்ய வேண்டும்.”

“என்ன?”

“என் அண்ணாவின் காலில் என் தலையை வீழ்த்த எண்ணுகிறேன். நீங்கள் வழிகாட்டுவீர்களா?”

“என்ன!”—புலவர் வியப்பில் மூழ்கினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/108&oldid=1362800" இலிருந்து மீள்விக்கப்பட்டது