பக்கம்:குமண வள்ளல்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாள் தந்த வளம்

103

“ஆம், இந்தப் பாவி அவரை அணுகிக் காலில் விழுந்து கதறித் துடிதுடித்தாலன்றிப் பாவம் தீராது. வாருங்கள், போகலாம்.”

புலவர் இத்தனை விரைவில் நன்மை உண்டாகுமென்று எதிர்பார்க்கவில்லை. இளங்குமணனை அழைத்துக்கொண்டு சென்றார் அண்ணனும் தம்பியும் கூடினர். தம்பி அழுது புரண்டான். கன்னத்தில் அறைந்துகொண்டான். மன்னிக்க வேண்டுமென்று கதறினான்.

சாந்தமும் அன்பும் நிறைந்த குமணன், “தம்பி, வருந்தாதே! நீ என்னை இராமபிரானாகச் செய்து விட்டாய். அவர் சிலகாலம் காட்டில் வாழ்ந்து மீண்டும் நாட்டுக்கு வந்தார். நானும் அப்படியே இருக்கிறேன்” என்று கூறினான்.

அண்ணா. நீங்கள் இராமபிரானுக்கு ஒப்பானவர் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. நீங்கள் எங்கே இருந்தாலும் அது அயோத்திதான். ஆனால் இந்தப் பாவி பரதனாக நடந்துகொள்ளவில்லையே! என்று மறுபடியும் அழுதான் தம்பி.

மீட்டும் குமணன் தன் நாட்டை அடைந்தான். கார் பெற்ற தோகை போலவும் கண் பெற்ற வாண் முகம் போலவும் நீர் பெற்று உயர்ந்த நிறைபுலம் போலவும் நாட்டு மக்கள் ஆனந்த வெள்ளத்தில் ஆழ்ந்தனர். குமணன் பெயரளவில் அரசனாக இருந்தாலும் ஆட்சிப் பொறுப்பில் பெரும் பகுதியைத் தன் தம்பியிடமே கொடுத்துவிட்டான். அவன் கை வாள் தம்பியிடமே இருந்தது. கொடுத்ததை மீண்டும் வாங்கிக்கொள்ளக்கூடாது அல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/109&oldid=1362803" இலிருந்து மீள்விக்கப்பட்டது