பக்கம்:குமண வள்ளல்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புகழ் கேட்ட புலவர்

5

வில்லை. என்னையும் அவர் பார்க்கவில்லை. பரிசில்தான் கிடைத்துவிட்டதே, வாங்கிக்கொண்டு போகலாம் என்ற எண்ணமும் எனக்கு உண்டாகவில்லை. வியாபார நோக்கு உடையவர்களுக்குத்தான் அந்த எண்ணம் தோற்றும். நான் பரிசிலன்தான்; ஆனால் வாணிகப் பரிசிலன் அல்லேன். அவர் என்னைக் கண்டு பேசி என் புலமைத் திறத்தை உணர்ந்து தினையளவு கொடுத்திருந்தாலும் இனிதாகப் பெற்றுப் போவேன். இது இங்கேயே இருக்கட்டும்” என்று சொல்லி எழப் போனார் பெருஞ்சித்திரனார்.

அவருடைய வீரப்பேச்சைக் கேட்ட அதிகாரி அயர்ந்து போனார். ‘இவர் உயர்ந்த புலவர்’ என்ற எண்ணம் அவருக்கு உண்டாயிற்று. அதற்குள் பெருஞ்சித்திரனார் தம்முடைய கருத்தையெல்லாம் அமைத்து ஒரு பாட்டையே பாடிவிட்டார்.

குன்றும் மலையும் பலபின் ஒழிய
வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்குஎன
நின்ற என்நயந்து அருளி, ‘ஈதுகொண்டு
ஈங்கனம் செல்க தான்’என என்னை
யாங்குஅறிந் தனனோ தாங்கருங் காவலன்?
காணாது ஈத்த இப்பொருட்கு யான்ஒர்
வாணிகப் பரிசிலன் அல்லேன்: பேணித்
தினை அனைத்து ஆயினும் இனிது, அவர்
துணையளவு அறிந்து நல்கினர் விடினே.

[1]


  1. குன்றுகளும் மலைகளும் பல பின்னிடக் கடந்து பரிசில் வாங்கிப் போவதற்கு வந்தேன் என்று நின்ற என்பால் அன்பு செய்தருளி, “இதைப் பெற்றுக்கொண்டு இப்படியே அவன் போகட்டும்” என்று, தாங்குதற்கரிய நாடு காவலுயுடைய அரசன் என்னை எவ்வாறு அறிந்தானே? என்னைக் காணாமல் கொடுத்த இந்தப் பொருளைப் பெறுவதற்கு யான் ஒரு வியாபார நோக்கமுடைய பரிசிலன் அல்லேன்; பாராட்டிக் கொடுப்பது தினையளவுடையதானாம், புலவர்களுடைய திறமையின் அளவை அறிந்து பரிசில் வழங்கி விடை கொடுத்தால் அதுவே இனிதாகும்.