பக்கம்:குமண வள்ளல்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புகழ் கேட்ட புலவர்

7

றும், போர் கடுமையாக நடைபெறுகிறதென்றும் கேள்வியுற்றார். அதிகமான் வெற்றி பெற வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொண்டார். ஆனல் முடிவு வேறு விதமாக ஆயிற்று. அதிகமான் நெடுமான் அஞ்சி அந்தப் போரில் வீழ்ந்து புகழுடம்பு பெற்றான்,

இந்தச் செய்தியைக் கேட்டதுமுதல் புலவருக்கு இருந்த ஊக்கம் குறைந்துவிட்டது. அதிகமானை ஒரு முறைதான் அவர் பார்த்திருந்தாலும் அவனுடைய உயர்ந்த பண்புகளை அவர் நன்கு உணர்ந்து கொண்டார். பல காலம் பழகிய அன்பு அவனிடம் மூண்டது.

‘இனி நம் வறுமையைப் போக்கிக்கொள்ள யாரிடம் போவோம்? நம்முடைய கவிதையின்பத்தை நுகர்ந்து பாராட்டும் வள்ளல் யார் இருக்கிறார்கள்? தமிழ் நாட்டில் புலவர்களுக்கு வரையறையில்லாமல் ஈயும் வள்ளல்கள் ஏழு பேர். அவர்கள் ஒவ்வொருவராக மறைந்துவிட்டனர். அந்த ஏழு பேர்களில் ஒருவனாகிய அதிகமானைப் பார்க்கக் கொடுத்துவைத்தும், பல காலம் பழகி, உள்ள நிறைவோடு பாராட்டிப் பாடக் கொடுத்துவைக்கவில்லை’ என்ற துயரத்தில் ஆழ்ந்திருந்தார் அவர்.

மனம் அவரைத் தகடூருக்கே அழைத்துச் சென்றது. மறுபடியும் அவர் இருந்த குடிசைக்கு அழைத்து வந்தது. அங்கங்கே உள்ள சில சிறிய செல்வர்களை அவர் அறிவார். அவர்களோடு அவர் பழகியிருக்கிறார், சிறு சிறு உதவிகளையும் பெற்றிருக்கிறார். ஆயினும் அவர்கள் எத்தனை காலத்துக்கு அவருடைய குடும்பத்தைத் தாங்க முடியும்?