பக்கம்:குமண வள்ளல்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

குமண வள்ளல்

அவர் பல இடங்களுக்குச் சென்று, உரியவர்களை எளிதில் பார்க்க இயலாமல் வருந்தினவர் என்று எண்ணினார் அதிகாரி. அவர் கேட்ட கேள்வியிலிருந்து தான் அந்த எண்ணம் உண்டாயிற்று.

“தடையின்றிப் பார்க்கலாம். இன்றே பார்க்கலாம். இப்பொழுதுகூடப் பார்க்கலாம். ஆனல் தாங்கள் வழி நடந்து இளைப்புற்றிருக்கிறீர்கள். இந்த நிலையில் தங்களை வைத்துப் பேசுவது முறையாகாது. முதலில் இளைப்பாறுங்கள்” என்றார் அதிகாரி.

பெருஞ்சித்திரனார் நீராடிவிட்டு வந்தார். அவர் கொண்டுவந்த ஆடையை உடுத்துக்கொள்ள விடவில்லை அதிகாரி, அரண்மனையிலிருந்து புதிய ஆடையை அளித்தார். புலவர் அதை அணிந்து கொண்டு அங்கே விருந்து உண்ணத் தொடங்கினர். அத்தகைய உணவை அவர் உண்டு எத்தனையோ நாட்கள் ஆயின. அதிகமானோடு அவர் உண்டிருக்கிறார்.

இப்போது அதிகமான் நினைவு அவருக்கு வந்தது. உடனே தம் வீட்டு நினைவும் வந்தது. அவருடைய தாயும், உப்பில்லாக் கீரையை உண்டு வாழும் மனைவியும், குழந்தைகளும் அவர் அகக் கண் முன் நின்றனர். அவர்கள் அங்கே நல்ல உணவின்றி வாடத் தாம் அறுசுவை உணவு பெறுவதை எண்ணும் போது அவருக்குத் துயரம் குமுறிக்கொண்டு வந்தது. வரும் வழியில் பார்த்த குரங்கை நினைத்தார். அதன் அன்பை நினைத்தார். தாம் இனிப் பெறப் போகும் பரிசிலைக் கொண்டு சென்று தம் குடும்பத்தினருடைய வறுமையை முதலில் போக்க வேண்டும் என்ற எண்ணம் அவர் உள்ளத்தில் ஓங்கி நின்றது.