பக்கம்:குமண வள்ளல்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முதற் காட்சி

17

கனி இருக்கிறது அல்லவா? பெருஞ்சித்திரனாரும் குமணனைப் பாராட்டும் பாடலைக் கையுறையாகக் கொண்டு சென்றார், அதை அவர் தம் உள்ளத்தில் உருவாக்கி வைத்திருந்தார்.

புலவர் குமணன் வீற்றிருந்த அவைக்களத்தைக் குறுகினார். அவன் அவரை அன்புடன் வரவேற்று அருகில் இருந்த இருக்கையில் அமரச் செய்தான்.

“நீங்கள் வந்திருப்பதாக அறிந்து அளவிலா மகிழ்ச்சி அடைந்தேன். புதிய நாடு ஒன்று கிடைத்தால் மன்னர்களுக்கு மிக்க இன்பம் உண்டாகும். புதிய புலவர் ஒருவரைக் கண்டு பழகுவதால் அதை விட மிகுதியான இன்பம் எனக்கு உண்டாகிறது. நெடுந்துாரத்திலிருந்து வந்திருப்பதாகக் கேள்வியுற்றேன். நன்றாக இளைப்பாறினீர்களா?” என்று தானே வலிந்து விசாரித்தான் குமணன். அவன் பேசிய மொழிகளிலே அன்பு கனிந்திருந்தது.

புலவர் அவனைக் கண்டவுடனே வாயடைத்துப் போனார். அவனுடைய அன்புரை அவரை வியப்பில் ஆழ்த்தியது. சிறிது நேரம் பேசவே இயலவில்லை. உணர்ச்சி அவர் உரைக்குக் காப்பிட்டது. பிறகு தெளிந்து பேசலானார்.

“எத்தனையோ காலமாக எளியேன் பண்ணிய புண்ணியத்தின் பயனாக இன்று மன்னர் பிரானைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. தமிழ்ப் புலவர்களை வரவேற்று உபசரித்துப் பாராட்டும் வள்ளல்கள் வரவரக் குறைந்துகொண்டே வருகிறார்கள். இந்தக் காலத்தில் அரசர்பிரான் கற்பக மரம் போல அவர்களைக் காப்பாற்றக் கங்கணம் கட்டிக்கொண்டிருப்பதாக முன்பே கேள்வியுற்றேன்.”