பக்கம்:குமண வள்ளல்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முதற் காட்சி

21

முடியுடை மன்னர்களுக்குத் துணையாகச் சென்று அவர்கள் போரில் உடனிருந்து பகைவரோடு பொருது வெற்றியைப் பெறச் செய்வதில் சிறந்தவன் மலையமான். அவ்வாறு துணை நின்று வென்ற காலங்களில் பேரரசர்கள் அவனுக்கு மிகுதியான பொருள்களை வழங்குவார்கள். அவற்றைக் கொண்டு வந்து தனக்கு என்று பாதுகாத்து வைத்துக்கொள்ளாமல் புலவர்களுக்கு அவ்வளவையும் வழங்கி இன்புறும் வள்ளன்மையுடையவன் அவன். ஆதலால் அவனை, “மாரி ஈகை மறப்போர் மலையன்” என்று பாடியிருந்தார் புலவர். அதைக் கேட்ட குமணன், “சுருக்கமாகச் சொன்னாலும் மலையமானின் பெருமையை நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள். எத்தனை போர்களில் அவன் முடியுடை வேந்தர்களுக்கு வெற்றியை வாங்கித் தந்திருக்கிறான்!” என்று பாராட்டினான். “நீங்கள் அதிமான் நெடுமான் அஞ்சியைப் பார்த்துப் பழகியதாகச் சொன்னீர்களே. அவனைப் பாடவில்லையோ?” என்று கேட்டான்.

“அவனைப் பாடாமல் இருப்பேனா? அடுத்தபடி அவன் புகழைத்தான் பாட்டில் கோத்திருக்கிறேன்.”

அதிகமானுக்கு எழினி என்று ஒரு பெயர் உண்டு. அவனுடைய மலைக்குக் குதிரை மலை யென்று பெயர்.

ஊராது ஏந்திய குதிரைக் கூர்வேற்
கூவிளங் கண்ணிக் கொடும்பூண் எழினியும்.

(ஏறிச் செலுத்தாமல் பிறரைத் தாங்கிய குதிரையாகிய மலையையும், கூரிய வேலையும், வில்வமாகிய தலையில் அணியும் அடையாள மாலையையும், வளைந்த அணிகலன்களையும் உடைய எழினியாகிய அதிகமானும்.)