பக்கம்:குமண வள்ளல்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முதற் காட்சி

23.

“ஐந்து பேர்களின் புகழைப் பாடியிருக்கும் நீங்கள் மற்ற இருவர் புகழை விட்டிருப்பீர்களா? ஆய் அண்டிரனும், நள்ளியும் உங்கள் பாட்டில் வருகிறார்கள் அல்லவா?”

“ஆம், வள்ளல்கள் எழுவர் என்று புலவர்கள் ஒரு வரிசைப்படுத்திச் சொல்லும் மரபை அறிந்த நான் அவ்விருவர்களையும் விடமுடியுமா?” என்று மற்ற இருவர் புகழைப் பாடிய பகுதியையும் புலவர் சொன்னார். ஏணிச்சேரி முடமோசியார் என்ற புலவர் ஆய்அண்டிரனைப் பாராட்டிப் பல பாடல்களைப் பாடியிருக்கிறார். அதனைப் புலவர் தம் பாட்டில் எடுத்துச் சொன்னார். நள்ளி என்ற வள்ளலின் தகைசான்ற வள்ளன்மையையும் பகைவரை ஓட்டிய வீரத்தையும் புகழ்ந்தார்

..................................திருந்துமொழி
மோசி பாடிய ஆயும், ஆர்வமுற்று
உள்ளி வருநர் உலைவுநனி தீரத்
தள்ளாது ஈயும் தகைசால் வண்மைக்
கொள்ளார் ஓட்டிய நள்ளியும்
என ஆங்கு எழுவர்.

[1] [செவ்விய சொல்லையுடைய முடமோகியார் என்னும் புலவர் பாடிய ஆயும், விருப்புற்றுத் தன்னை எண்ணி வருபவர்களுடைய தளர்ச்சி நன்றாகப் போகும்படி வெறுப்பின்றிக் கொடுக்கும் தகுதி மிக்க வள்ளன்மையையுடையவனும், பகைவர்களை வென்று புறங்காட்டி ஒடும்படி செய்தவனுமாகிய நள்ளியும் என்று அவ்வாறு சொல்லப் பெற்ற ஏழு வள்ளல்கள்.]


  1. * திருந்து மொழி - குற்றமின்றிச் செம்மையாக அமைந்து சொற்கள். மோசி - உறையூரில் ஏணிச்சேரி என்ற பகுதியில் வாழ்ந்திருந்த முடமோசியார் என்னும் புலவர். ஆய் - ஆய்அண்டிரன்; இவன் பொதிய மலைக்குத் தலைவன். வருநர் வருவோர். உலைவு தளர்ச்சி. தகை - தகுதி, அழகு என்றும் சொல்லலாம். கொள்ளார் - பகைவர். நள்ளி கண்டீரக்கோப் பெருநள்ளி என்னும் வள்ளல்.