பக்கம்:குமண வள்ளல்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிரியா விடை

31

யும் உபசாரத்தைப் பெற்று நல்விருந்து உண்டு மகிழ்கிறேன். இடையிடையே அவர்களை நினைத்துக்கொள்கிறேன். அவர்கள், அங்கே என்ன செய்கிறார்களோ!”

“அவர்கள் உங்களைப் பிரிந்து வருந்துவார்கள். ஆனாலும் புலவர்கள் எப்போதும் வீட்டிலேயே இருக்க முடியுமா? இருந்தால் நாங்களெல்லாம் தமிழ் விருந்தை அருந்துவது எப்படி?”

“அவர்கள் என் பிரிவால் வருந்துவார்கள் என்பதை நான் எண்ணவில்லை. வறுமை என்னும் பேயினால் அலைப்புண்ட அவர்கள் என்ன நிலையில் வாடுவார்களோ என்றுதான் நினைத்து வருந்துகிறேன்.”

“வறுமை நிலை என்றா சொன்னீர்கள்? ஏன்?”

“ஏனா? புலவர்களுக்கு வள்ளல்கள் ஈயும் பொருளே பொருள். நான் எந்த வள்ளலையும் அணுக முடியாமல் தவித்தேன். இப்போதுதான் இங்கே வரும் வாய்ப்புக் கிடைத்தது.”

“உங்கள் தாயார் மிக்க முதுமை உடையவர்களோ?”

“தலையெல்லாம் வெள்ளை நூல்போல நரைத்துப் போய்விட்டது. கோலை ஊன்றிச் சில அடிகள் வைத்து நடப்பாள். அதற்குள் தளர்ச்சி வந்துவிடும். ‘இன்னும் பல ஆண்டுகள் தொல்லையுற வேண்டும் என்று விதித்திருக்கும்போது என் உயிர் போகுமா?’ என்று தன்னைத் தானே நொந்துகொண்டு காலத்தைக் கழிக்கிறாள். எங்கும் வெளியிலே செல்வதில்லை. வீட்டு வாசலிலே சிறிது நடப்பாள். மறுபடி திண்ணையிலே முடங்கிக்கொள்வாள்.”

“ஐயோ பாவம் மிகவும் வருத்தத்தைத் தரும் செய்தி. உங்கள் குடும்பத்தைப்பற்றி நான் இவ்