பக்கம்:குமண வள்ளல்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

‘எல்லோர்க்கும் கொடு’

43

திருப்பித் தர முடிகிறபோது தந்தால் போதும்” என்று சொல்லி அளித்தார்கள். அவர்களுக்கு அவளிடம் அத்தகைய அன்பு வளர்ந்திருந்தது. அவள் பண்டங்கள் குறைந்து வருவதை அறிந்து செலவைக் குறைத்தாள். இல்லாத பொருள்களைத் தனக்குத் தெரிந்தவர்களிடம் கடனாக வாங்கிக்கொண்டாள். அவற்றை அளந்து வாங்கிக்கொண்டு, குறிப்பிட்ட அந்த அளவுப்படியே மீட்டும் அளந்து தருவதாகச் சொன்னாள். இதற்குக் குறியெதிர்ப்பை என்று பெயர்.

இப்படி இன்னும் பல நாட்கள் வாழ முடியாது என்பதைப் புலவர் மனைவி உணர்ந்தாள். பெருஞ்சித்திரனாரோ ஒரு கவலையும் இல்லாமல் இருந்தார். ஒரு நாள் அவர் மனைவி அவரிடம், “மறுபடியும் ஒரு முறை குமண வள்ளலிடம் போய்விட்டு வாருங்கள்” என்று மெல்லத் தெரிவித்தாள்.

“ஏன்? அவரிடம் போய் வந்து நெடு நாட்கள் ஆகவில்லையே!” என்றார் புலவர்.

“அவர் உங்களை அனுப்புவதற்கு மனம் இல்லாதவராக இருந்தார் என்று சொன்னீர்களே; மறுபடியும் அவரைப் போய்ப் பார்க்கவில்லையா?”

“பார்க்கத்தான் வேண்டும். இன்னும் சில நாட்கள் போகட்டும்.”

“மறுபடியும் பழைய நிலை வந்த பிறகு போகலாம் என்று நினைத்திருக்கிறீர்களோ?”–அவள் சற்றே பரிகாசம் தொனிக்கும் குரலில் பேசினாள். மனைவிக்கு அந்த உரிமைகூட இல்லையா?

“நான் வாங்கி வந்த பொருள்கள் எல்லாம் ஆகிவிட்டனவா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/49&oldid=1357151" இலிருந்து மீள்விக்கப்பட்டது