பக்கம்:குமண வள்ளல்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

குமண வள்ளல்

ஒழுங்கு செய்த பிறகு தன் கணவரிடம் வந்தாள். “எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டேன். ஏதோ சொல்ல வேண்டும் என்று சொன்னீர்களே! என்ன அது?” என்று கேட்டாள்.

“அதுவா? இப்படி உட்கார், சொல்கிறேன். இவ்வளவு பண்டங்களையும் என்ன செய்யப் போகிறாய்?”

“என்ன செய்வார்கள்? வைத்துக்கொண்டு செட்டாகக் குடித்தனம் செய்வேன்.”

“அது வேண்டாம் என்று சொல்லத்தான் உன்னை அழைத்தேன். குமண வள்ளல் இருக்குமட்டும் நமக்கு ஒரு குறைவும் வராது. இந்தப் பொருள்களை யெல்லாம் வேண்டியவர்களுக்குக் கொடு.”

“யாருக்குக் கொடுப்பது?”

அதை நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஆனாலும் சொல்கிறேன் கேள்: உன்னைத் தேடிக்கொண்டு தாமே இங்கே வந்து தங்கும் ஏழை உறவினர்கள் இருக்கிறார்களே, அவர்களுக்கு வேண்டியதைக் கொடு. நீயாக விரும்பிச் சிலரை அழைத்தாயே, அவர்களுக்கும் கொடு. நான் சொல்வதைக் கேட்டு அப்படியே நடக்கும் மாட்சிமையுள்ள கற்புடையவள் நீ ஆதலால் இதைச் சொல்கிறேன். உனக்குச் சொந்தக்காரர்கள் யார் உண்டோ அவர்களுக்கும் எடுத்துக் கொடு. பல காலமாக எத்தனையோ பண்டங்களை அயலாரிடம் அளந்து வாங்கியிருக்கிறாய்; திருப்பித் தருவதாகச் சொல்லி வாங்கியிருக்கிறாய், அப்படிப் பெற்ற குறியெதிர்ப்பைகளை யெல்லாம் ஒன்றுகூட மிச்சமின்றித் திருப்பிக் கொடுத்துவிடு. இவருக்குக் கொடுக்கலாமா, அவருக்குக் கொடுக்கலாமா என்று என்னைக் கேட்க வேண்டுமென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/54&oldid=1357158" இலிருந்து மீள்விக்கப்பட்டது