பக்கம்:குமண வள்ளல்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

குமண வள்ளல்

கொடுத்தவர்களுக்கும், இன்னாருக்கு என்று ஆராய்ந்து பாராமல், என்னோடு கலந்து யோசனை செய்யாமல், சாமர்த்தியமாக இதை வைத்துக்கொண்டு வாழலாம் என்று நினையாமல், வீட்டுக்குத் தலைவியே, பழங்கள் தொங்கும் முதிர மலைக்கு உரியவனும் செம்மையான வேலை உடையவனுமாகிய குமணன் வழங்கிய பொருளே, நீயும் யாவருக்கும் கொடுப்பாயாக.]

புலவர் இவ்வாறு கூறுவதைக் கேட்ட மனைவி முதலில் சிறிது தடுமாறினாள். அவர் மறுபடியும், “குமணன் செல்வம் எல்லாம் நம் செல்வந்தான். இறைக்க இறைக்க ஊறும் கிணறுபோல் கொடுக்கக் கொடுக்கத்தான் நமக்கும் செல்வம் வரும். செல்வத்தைப் பெற்றவர்கள் யாராக இருந்தாலும் அதைப் பாதுகாத்து வைப்பதால் பயன் இல்லை. பிறருக்கும் கொடுத்துத் தாமும் உண்ணவேண்டும். அதில்தான் உண்மையான இன்பம் இருக்கிறது. ஆதலால் நீ யாவருக்கும் கொடு. வாங்கும் இன்பத்தை நன்கு அறிந்த நமக்குக் கொடுக்கும் இன்பத்தையும் அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்திருக்கும்போது அதை விடலாமா?” என்றார்.

அவர் தாம் பட்ட வறுமையை மறந்தார். கிடைத்த செல்வத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற உலோப குணம் அவரிடம் இல்லை. உயிர்களுக்கெல்லாம் அன்பு பாலிக்கும் உள்ளமுடையவர் அவர் நல்ல கவிதை பிறக்கும் உள்ளம் அல்லவா அது? அவருக்கு இந்தப் பொருள் பெரிது அன்று. இதை அவர் எப்போதும் போற்றிப் பாதுகாத்துச் சேமிப்பதற்குரியதென்று கருதவில்லை. அவருக்கும் வண்மைப் பண்பு இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/56&oldid=1362578" இலிருந்து மீள்விக்கப்பட்டது