பக்கம்:குமண வள்ளல்.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6. யானைப் பரிசில்

பெருஞ்சித்திரனார் வெளிமானூரை விட்டுப் புறப்பட்டவர் தம் ஊருக்குக்கூடப் போகவில்லை. நேரே குமணனது ஊரை அடைந்தார். அங்கே சென்றாலே அவருக்குப் புதிய ஊக்கம் உண்டாகும். அவரைக் கண்டவுடன் அன்போடு வரவேற்கும் கரங்கள் அங்கே இருந்தன. அன்பு கனியப் பார்க்கும் குளிர்ந்த கண்கள் இருந்தன. முன்மொழி புகன்று நயங்காட்டும் வாய்கள் இருந்தன. நல்ல நெஞ்சங்கள் இருந்தன. அதனால் முதிரத்தின் காற்றுப் படும் எல்லைக்குள்ளே வரும் போதே அவருக்கு உள்ளம் குளிர்ந்தது. உலகிலுள்ள எல்லா உயிர்களுமே அன்புக்காக ஏங்கி நிற்பவை. புலவர்களோ வரிசை அறிந்து பாராட்டி அன்பு செய்பவர்களுக்காக ஏங்கி நிற்பவர்கள். வரிசை அறியாதவர்களையும் அன்பு இல்லாதவர்களையும் காணும்போது அந்த ஏக்கம் அவர்களுக்கு அதிகமாகிறது. அந்த நிலையில் தான் இப்போது பெருஞ்சித்திரனார் இருந்தார்.

வழக்கம்போலக் குமணன் தாயைக் கண்ட குழந்தை போலக் களிக் கூத்தாடினான். “வீட்டில் யாவரும் சுகமாக இருக்கிறார்களா?” என்று கேட்டான்.

“மன்னர் பிரானுடைய அருளால் யாவரும் சுகந்தான்!” என்று விடையிறுத்தார் புலவர்.

பிரிந்தவர் கூடினார்கள்; பேசினார்கள். அன்பு பொங்கப் பொங்கப் பேசினார்கள். புலவர்களின் நிலையைப்பற்றியும், உத்தமமான கொடையாளிகளைப் பற்றியும் மாறி மாறிப் பேசினார்கள். விருந்துண்ணு-

5