பக்கம்:குமண வள்ளல்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குமண வள்ளல்

1. புகழ் கேட்ட புலவர்

காலை நேரம் அது. வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தார் பெருஞ்சித்திரனார். அவர் உள்ளம் தண்டமிழ்ச் செல்வம் நிறைந்த கருவூலம். ஆனால் அவர் இல்லமோ கூரை வேய்ந்த குடிசைதான். அங்கே திருமகள் தாண்டவம் ஆடவில்லை. மருமகளாகிய கலைமகள் வாழும் இடத்தில் வாழ்வதற்கு அந்தப் பெருமாட்டி திருவுளம் கொள்வதுதான் இல்லையே! புலவர் எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தார். புதிய கவிதைக்குரிய பொருளைச் சிந்திக்கவில்லை. பழைய பொருளைக் கற்பனை வண்ணத்தில் தீட்டவும் முயலவில்லை. தம்முடைய இல்லத்தில் நிலவிய வறுமையைப் போக்கும் வழி என்ன என்பதைப் பற்றியே அவர் சிந்தித்துக் கொண்டிருந்தார்.

தமிழ் நயம் தேர்ந்து இன்புறும் செல்வர்களைத் தேடிச் சென்று தம் கவித்திறத்தைப் புலப்படுத்தி, அவர்களுடைய பாராட்டையும் பரிசையும் பெற்று, வாழ்க்கையை நடத்துபவர் அவர். அவருக்குப் பழக்கமான பெருவள்ளல் அதிகமான் எழினி என்பவன், தன்னுடைய நகரமாகிய தகடூரில் சேர அரசனாகிய பெருஞ்சேரல் இரும்பொறையோடு பொருது வீழ்ந்து விட்டான் என்ற செய்தி அணிமையில் அவர் காதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/7&oldid=1382657" இலிருந்து மீள்விக்கப்பட்டது