பக்கம்:குமண வள்ளல்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

குமண வள்ளல்

ஆதலால் அந்தப் பெருமைக்கு ஏற்ற வகையில் மன்னர்பிரானது கொடை இருக்கவேண்டாமா? என்னை அளவிட்டு நோக்காமல் அரசர்பிரான் தம்மை அளவிட்டுப் பார்த்தால் நான் கேட்பதில் தவறு ஒன்றும் இல்லை என்பது புலப்படும்.”

“இத்தனை பேச்சு எதற்கு? உங்களுக்குப் பேராசை என்று நான் சொன்னேனா? போயும் போயும் யானையைத்தானே கேட்கிறீர்கள்? இது ஒரு பெரிய பொருளா? என் நாட்டையே கேட்டாலும் கொடுத்து விடுவேனே! உங்கள் புலமையை அளவிட உங்களுக்குத் தகுதி இல்லை. உங்களுக்கு யானையின் மேல் ஆசை உண்டென்று தெரிந்திருந்தால் முன்பே தந்திருப்பேனே! அதைக் கொண்டு போய்க் கட்டிப் போட்டுத் தீனி போடவேண்டுமே! இப்போது உங்களுக்கு எத்தனை யானை வேண்டும்?”

“ஒன்றை நான் கொண்டு போய்க் காப்பாற்றினால் போதாதா?”

“அப்படியே தருகிறேன். அதைப் பாதுகாக்க ஆளும் பொருளும் தருகிறேன்.”

புலவர் அதைக் கேட்டுப் பெற்ற மகிழ்ச்சியை அளவிட முடியுமா? ‘யானை, அதற்கு ஆள், அதை வளர்க்கப் பொருள்! அடே அப்பா! வள்ளன்மையின் பெருமைதான் என்னே!’ என்று வியந்தார்.

“நான் யானையின் மேல் போகும்போது கண்டவர்கள் யானை ஏது என்று கேட்பார்கள். நான் மன்னர்பிரான் வழங்கியதாகச் சொல்வேன். மற்றப் புலவர்களிடமும் சொல்வேன். எல்லோரும் சேர்ந்து மன்னர் பெருமானை வாழ்த்துவோம். அதுமட்டும் அன்று; மற்றொரு பயனும் உண்டு.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/72&oldid=1357144" இலிருந்து மீள்விக்கப்பட்டது