பக்கம்:குமண வள்ளல்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யானைப் பரிசில்

67

“என்ன அது?” என்று கேட்டான் குமணன்.

“புலவனுக்கு முதிரமலைத் தலைவர் யானை கொடுத்தார் என்ற செய்தி மற்ற அரசர் காதிலும் விழும். பணத்தைப் பூதம் போலக் காக்கின்ற வேந்தர்களும், புலவர்கள் வந்தால் பிச்சை யிடுவதுபோலச் சிறிது கொடுத்தனுப்புகிற அரசர்களும் இருக்கிறார்கள். அவர்களெல்லோரும் நாணும்படியாக நான் போவேன். ‘குமண வள்ளல் யானை தந்தார்; அதைப் பெற்ற புலவர் அதோ போகிறார்’ என்று நாலுபேர் மதிப்போடு சொல்லப் பெருமிதத்தோடு செல்வேன்.”

குழந்தை உள்ளத்தோடு புலவர் பேசினர். அதைக் கேட்கக் கேட்கக் குமணன் மகிழ்ச்சி அடைந்தான். தன் குழந்தை அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்பதைத் தந்தை கேட்டு மகிழ்வதில்லையா?

“எப்போது புறப்பட எண்ணியிருக்கிறீர்கள்?”

“மன்னர்பிரான் மனமுவந்து விடை கொடுக்கும் போது.”

“உங்களுக்கு வீட்டு நினைவு வந்துவிட்ட பிறகு உங்களை நிறுத்திவைப்பது பாவம். நீங்கள் நாளைக்கே யானையுடன் புறப்படலாம்.”

புலவர் களி பொங்க நின்றார். தம் கருத்தையெல்லாம் பாடல் வடிவத்தில் வடித்துச் சொன்னர்.[1]

மறுநாளே யானை ஒன்றை அலங்காரம் செய்து, அதன்மேல் புலவரை ஏற்றி, ஒரு பாகனையும் அனுப்பினான் குமணன். வழக்கப்படி பல வண்டிகளில் பரிசுப் பொருள்களையும் உணவுப் பண்டங்களையும் நிரப்பிப் பின் செல்லும்படி ஏற்பாடு செய்தான்.


  1. புறநானூறு, 161.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/73&oldid=1362660" இலிருந்து மீள்விக்கப்பட்டது