பக்கம்:குமண வள்ளல்.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

குமண வள்ளல்

புலவர் யானையின் மேல் ஏறிக்கொண்டார். தாம் நினைந்தபடியே காரியம் நிறைவேறுவதை எண்ணி எண்ணி மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தார். யானை புறப்பட்டது. குமணன் அவர் தம்முடைய ஊருக்குச் செல்லுகிறார் என்றுதான் நினைத்தான்.

இளவெளிமானுக்கு முன்னே சென்று, தாம் யானைப் பரிசில் பெற்றதைச் சொல்லவேண்டும் என்பதே புலவருடைய அவா. ஆதலின் நேரே யானையை வெளிமானூர்க்கு ஓட்டச் சொன்னார். அதன் வழியாகவும் புலவருடைய ஊருக்குப் போகலாம்.

யானையும் வண்டிகளும் வெளிமானூர் எல்லையை அடைந்தவுடன் புலவர் வண்டிகளை அங்கே நிறுத்தச் சொன்னார். யானையை மாத்திரம் ஊருக்குள் ஓட்டிச் செல்லச் செய்தார். ஊரில் அரண்மனையைச் சார்ந்த ஓரிடத்தில் வெளிமான் பிறந்த குலத்தினருக்கு உரிய காவல் மரம் நின்றது. தமிழ் நாட்டில் பழங்காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் தங்கள் குலத்துக்கு அடையாளமாக மாலை, கொடி முதலியவற்றைத் தனித் தனியே வைத்திருந்தார்கள். அத்தகைய அடையாளங்களுள் ஒன்று காவல் மரம். கோயிலில் தலத்துக்குரிய மரம் இருப்பதுபோல அரச குலத்துக்குக் காவல் மரம் இருந்தது. அதை அரசர்கள் கண்ணைப் போலப் பாதுகாத்தார்கள். பகைவரோடு போர் புரியும் போது மன்னர்கள் அப்பகைவர்களுக்குரிய காவல் மரத்தை வெட்டிவிடுவார்கள். அதிலிருந்து போர் மூளுவதும் உண்டு. தோற்ற மன்னர்களுடைய காவல் மரத்தை வெட்டி வெற்றி முரசு செய்ய அதைப் பயன்படுத்திக்கொள்வது பழங்கால மன்னர்களுக்கு வழக்கமாக இருந்தது.