பக்கம்:குமண வள்ளல்.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

குமண வள்ளல்

கிறார்கள். ஆனால் நீங்கள் இரவலர்களைக் காப்பாற்றும் புரவலர் ஆகமாட்டீர்கள். உங்கள் உதவி இல்லா விட்டால் புலவர்களைக் காப்பாற்றுவார் இல்லாமற் போகவில்லை. இப்போது, நல்ல வள்ளல்களிடம் சென்று வேண்டிய பொருளைக் கேட்கும் இரவலர் உலகத்தில் இருக்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்; அந்த இரவலர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுக்கும் கொடையாளர். இருப்பதையும் அறிந்துகொள்ளுங்கள். நான் ஒரு பரிசில் பெற்று வந்திருக்கிறேன். அதை வந்து உங்கள் கண்ணால் பாருங்கள். உங்கள் காவல் மரம் தளரும்படி நான் பெற்ற பரிசிலாகிய நெடுநல் யானையை அதில் கட்டி விட்டு வந்திருக்கிறேன். அதை வந்து பார்த்த பிறகாவது இரவலருடைய பெருமையையும் புரவலருடைய இயல்பையும் தெரிந்துகொள்ளுங்கள். சரி, உங்களிடம் நின்று பேசுவதில் பயன் ஒன்றும் இல்லை. அரசரே! போய் வருகிறேன்.” என்று சொல்லி ஒரு பாடல் எழுதிய ஓலையையும் அவனிடம் கொடுத்து விட்டு வேகமாய்த் திரும்பினார், தம் யானையைக் காவல் மரத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டு ஊர் எல்லையை அணுகி, அங்கிருந்த வண்டிகளுடன் புறப்பட்டு விரைவாக ஊர் போய்ச் சேர்ந்தார்.

இளவெளிமான் புலவர் மிடுக்குடன் பேசிவிட்டுச் சென்றதைக் கண்டு செயலிழந்து இருந்தான். அவருடைய நெஞ்சத் திண்மை அவனை அப்படி ஆக்கிவிட்டது. அவர் வந்து படபடவென்று பேசிவிட்டுப் போனது ஒரு வேளை கனவாக இருக்குமோ என்று கூட அவனுக்கு ஐயம் உண்டாயிற்று. ஆயினும் பெருஞ்சித்திரனார் விட்டுச் சென்ற ஓலை முன்னே