பக்கம்:குமண வள்ளல்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

குமண வள்ளல்

“நீங்கள் ஏன் அப்போதே வந்து சொல்லவில்லை?” என்று கேட்டான். “பகையரசராக இருந்தால் உடனே வந்து சொல்லியிருப்போம். அதனை அணுகவே விடமாட்டோம். புலவர் பகைவர் அல்லவே! அவர் தவறாக ஏதும் செய்யமாட்டார். அதனால் நாங்கள் ஒன்றும் செய்யவில்லை” என்றார்கள் அவர்கள்.

‘இவர்களுக்குத் தெரிந்த அளவுகூட உனக்குத் தெரியவில்லையே! உன் அடி நிழலில் வாழும் இவர்களுக்கே புலவர்களிடம் மதிப்பு இருக்குமானால் உலகத்தில் மிகுதியான மதிப்பு இருப்பது என்ன வியப்பு? இதை நீ உணரவில்லையே!’ என்று அவன் நெஞ்சம் குத்திக் காட்டியது.

ஊர் சென்ற பெருஞ்சித்திரனார் தம் மனைவியிடம் எல்லாக் கதையையும் சொன்னார். ஊரே அவர் தைரியத்தையும் பெருமையையும் அறிந்து பாராட்டியது.

பெருஞ்சித்திரனார் அடுத்த முறை குமணனிடம் சென்றபொழுது யானையைத் தாம் கேட்டதற்குக் காரணத்தையும், நடந்த நிகழ்ச்சியையும் சொல்லித் தாம் பாடிய பாடலையும் சொன்னார். “வீரமும் படைப் பலமும் உடைய மன்னர்களால் செய்ய இயலாத செயலை நீங்கள் செய்துவிட்டீர்கள். உங்களிடம் வாளையும் வேலையும் விட அஞ்சுவதற்குரிய கவிதை இருக்கிறது. அதனால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்” என்று குமணன் கொண்டாடினான்.

“கவிதை இருப்பது மட்டும் போதாது. அதை அறிந்து சுவைத்துப் புலவரைப் புரக்கும் புரவலர்களும் இருப்பதனால் தான் எங்களுக்கு இத்தகைய வீரம் உண்டாகிறது” என்று சொல்லிப் புலவர் குறிப்பாகக் குமணனைப் புகழ்ந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/78&oldid=1362696" இலிருந்து மீள்விக்கப்பட்டது