பக்கம்:குமண வள்ளல்.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

குமண வள்ளல்

டிருந்தால், எவ்வளவு வருவாயுள்ள நாடாக இருந்தாலும் ஒரு நாள் வரவு வற்றிப் போய்விடும். அப்படி வந்தால் இவன் எப்படியாவது வாழ்வான்; அல்லது மானம் கருதித் தற்கொலை செய்துகொண்டாலும் செய்துகொள்வான். இவனோடு சேர்ந்து நாமும் துன்புற வேண்டியிருக்கும். அதற்குமுன் நாம் அறுத்துக்கொண்டு போவதே நலம்’ என்ற எண்ணம் அவனிடம் வன்மையாக உண்டாயிற்று.

அண்ணனிடம் பணிவாக நடந்துகொண்டிருந்தவன் எதிர்த்துப் பேசத் தொடங்கினன். அவன் செய்யும் ஒவ்வொரு செயலையும் தடுத்தான். அரண்மனைக்கு வரும் புலவர்களிடம் கடுகடுவென்று நடந்து கொண்டான்.

குமணனுக்கு அவன் ஒருவன்தான் தம்பி. யாவரும் அவனை இளங் குமணன் என்று வழங்கி வந்தனர். நாளுக்கு நாள் அவனுடைய முரண்பாடு மிகுதியாகி வந்தது. அதைக் குமணன் கவனித்தான். அவனுக்கு மிக்க வருத்தம் உண்டாயிற்று.

“இப்படியே வாரி இறைத்துக்கொண்டிருந்தால் எல்லாவற்றையும் இழந்துவிட்டு நீயும் ஒரு நாள் புலவனைப்போல நாலு தமிழ்ப் பாட்டைப் பாடிக்கொண்டு யாரிடமாவது போய் இரந்து வாழ வேண்டியதுதான். உன்னைச் சார்ந்தவர்களெல்லாம் ஆலாய்ப் பறப்பார்கள்” என்று அவன் நேரிலே தன் தமையனைக் கண்டிக்கத் தொடங்கினன்.

“தமிழ்ச்சாதி கொடையிலும் வீரத்திலும் இணையற்ற சாதி, அப்பா. இந்த நாட்டில் மன்னர் குலத்தில் பிறந்து செல்வமும் பெற்று வாழ்வது அச் செல்வத்தை நாமே துய்ப்பதற்காக மாத்திரம் அன்று. இல்-