பக்கம்:குமண வள்ளல்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குமணன் அரசு துறத்தல்

75

வாழ்பவன் யாராக இருந்தாலும் செல்விருந்து ஓம்பி வரு விருந்து பார்த்திருக்கும் இயல்புடையவனாக இருக்கவேண்டும். செல்வனாக இருந்தால் செழுங்கிளை தாங்கி விருந்தினர்களைப் பேணி அறம் செய்ய வேண்டும். மன்னராகப் பிறந்துவிட்டாலோ ஆலமரம் பல பறவைகளுக்கு இடமும் உணவும் கொடுப்பதுபோலச் சுற்றத்தாரையும், விருந்தினர்களையும், புலவர்களையும், பாணர் கூத்தர் ஆகியவர்களையும் பாதுகாக்க வேண்டும். அவர்களை ஆதரிப்பதனால் நாம் கெட்டுப் போகமாட்டோம். ஒருகால் நம் செல்வம் குறைய, வறுமை வந்தாலும் அந்த வறுமையை நாம் வரவேற்க வேண்டும். ஒருவருக்கும் கொடுக்காமல் சேமித்துவைத்து வாழும் செல்வத்தைவிடப் பிறருக்குக் கொடுத்து உண்டாகும் வறுமை சிறந்தது.”

“இந்த அறிவுரைகள் எல்லாம் கேட்பதற்கு நன்றாக இருக்கின்றன. இவற்றையே புலவர்கள் பாட்டாகப் பாடி உன்னைப் போன்றவர்களை ஏமாற்றுகிறார்கள். உண்மையில் அவர்கள் பாட்டாக உனக்கு ஓதியதைத்தான் இப்போது பேச்சாக என்னிடம் சொல்கிறாய். அரசன் கொடுக்கவேண்டும் என்று சொல்கிறாய். ஆனல் அதற்கு ஓர் அளவு இல்லையா? அரசன் தன் நாட்டைப் பாதுகாக்க வேண்டாமா? சுவரை வைத்துக்கொண்டுதானே சித்திரம் எழுதவேண்டும்? பொழுது விடிந்து பொழுது சாய்கிற மட்டும் புலவர்களோடு இருந்து பேசிப் பேசிக் கழித்துவிட்டால் நாடு வளம் சுரக்குமா? பகைவர்கள் சும்மா இருப்பார்களா? இவன் கையாலாகாதவன் என்று கருதிச் சமயம் பார்த்து நம் நாட்டைக் கைப்பற்றுவதற்குரிய சூழ்ச்சியைச் செய்ய மாட்டார்களா? அவர்கள் ஒருநாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/81&oldid=1362713" இலிருந்து மீள்விக்கப்பட்டது