பக்கம்:குமண வள்ளல்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

குமண வள்ளல்

உண்டு. அவன் அப்படியே வாழட்டும். நம்முடைய நாடு விரிந்தது. இதில் ஒரு பகுதியை அவனுக்கு வழங்கி, அவன் விருப்பப்படியே வாழும்படி செய்துவிடலாம். தந்தையின் நிலபுலன்களை மக்கள் பிரித்துக் கொண்டு வாழ்வதில்லையா? அதுபோல இதுவும் இருக்கட்டுமே!' என்று தீர்மானம் செய்தான்.

மறு நாள் இளங்குமணனிடம் முதிரத்துத் தலைவன் தன் கருத்தை வெளியிட்டான். அதை அவன் எதிர்பார்க்கவில்லை. சிறிது நேரம் அவனும் யோசித்தான். "இப்படிச் செய்ய அமைச்சர்களும் சான்றோர்களும் ஒப்புக்கொள்வார்களா?" என்று கேட்டான்.

"அவர்களை உடன்படும்படி நான் செய்கிறேன். இந்த நாட்டை நான் ஒருவனே ஆள்வதைவிட இரண்டு பேர் பிரித்துக்கொண்டு ஆள்வது நல்லது தானே?" என்று குமணன் கூறினான்.

அன்றுமுதல் நாட்டைப் பிரித்துத் தன் தம்பிக்கு ஒரு பகுதி வழங்கும் வேலையில் ஈடுபட்டான் குமணன். இளங்குமணன் தன் கட்சி வென்றதை எண்ணி எண்ணி மகிழ்ந்தான். இன்னபடி யெல்லாம் வாழ வேண்டும் என்று மனத்தில் கோட்டை கட்டினான்.

நாடு இரண்டாயிற்று. குமணன் ஒரு பகுதியையும், அவன் தம்பி இளங்குமணன் மற்றொரு பகுதியையும் ஆளத் தொடங்கினர். குமணனது அரண்மனையில் புலவர்கள் வழக்கம்போல் வந்து பரிசில் பெற்றுச் சென்றார்கள். இளங்குமணனே தானும் தன் மனைவி மக்களும் எவ்வளவு மிகுதியான இன்பத்தை நுகரலாமோ அவ்வளவும் நுகர முயன்றான். புலவர்களுக்கு அவனிடம் வேலை இல்லை. தமிழ் நாட்டில் எங்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/84&oldid=1355351" இலிருந்து மீள்விக்கப்பட்டது