பக்கம்:குமண வள்ளல்.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குமணன் அரசு துறத்தல்

79

இல்லாதபடி குமணன் தன் நாட்டைத் தம்பிக்குப் பிரித்துக் கொடுத்தான் என்ற செய்தி பரவி அவ்வள்ளலுடைய பெருமையை மிகுதியாக்கியது.

தனியாகப் பிரிந்து அரசனாக வாழ்ந்த இளங் குமணனுக்கு மண்ணாசை மிகுதியாயிற்று. தான் பெற்ற நாடு போதாதென்று எண்ணினான். தன் தமையனுடைய நாட்டையும் கைப்பற்றிக் கொள்ள வேண்டும் என்ற பொல்லாத எண்ணம் அவன் மனத்தில் முளைத்தது. குமணனும் அவனும் ஒன்றாக வாழ்ந்தபோது அவனுக்கு இருந்த அச்சம் இப்போது மாறியிருக்கும் என்றுதான் குமணன் நினைத்தான். அதற்கு மாறாக இளங்குமணன் இருந்தான். "குமணன் மக்கள் இன்றி இறந்தால் இந்த நாடு முழுவதையும் ஆளும் உரிமை எனக்குத்தானே கிடைக்கும்? இப்போது எனக்குக் கிடைத்திருப்பது ஒரு பகுதிதானே?" என்று நினைக்கும் அளவுக்குத் தம்பி மாறிவிட்டான் என்பதை அண்ணன் உணர்ந்து கொள்ளவில்லை.

இளங்குமணன் தன் அண்ணனுடைய நாட்டையும் எப்படிப் பறிக்கலாம் என்று யோசித்துப் பார்த்தான்; 'கேட்டு வாங்க முடியாது. தன்னிடம் நாடு இருந்தால்தான் புலவர்களுக்கு விருப்பப்படி அவன் பொருளை வீச முடியும். அவன் நாடு வைத்திருப்பது இதற்காகத்தான். அவன் ஈகையை நிறுத்தவும் மாட்டான். அதற்கு ஏற்ற செல்வ வருவாயையுடைய நாட்டைத் தரவும் மாட்டான். வஞ்சகத்தினலோ, போரினாலா அந்த நாட்டை வெளவிக்கொள்வதுதான் வழி' என்று தெளிந்தான். 'என்ன செய்வது? எப்படிச் செய்வது?’ என்று ஆலோசனை செய்தான். அவனுக்கு