பக்கம்:குமண வள்ளல்.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குமணன் அரசு துறத்தல்

83

புகுவதா? அவன் உள்ளத்தில் பெரும் புயல் அடித்தது. உலகமே அவன் அகக் கண் முன்னே சுழன்றது. வேறு அரசன் இப்படி ஓலை அனுப்பியிருந்தால், நம் அமைச்சர்களையும் சான்றோர்களையும் படைத் தலைவர்களையும் கூட்டி என்ன செய்வது என்று யோசனை செய்யலாம். இந்த வெட்கக் கேட்டை யாரிடம் சொல்வது? என் தம்பி போருக்கு வரப் போகிறான், வாருங்கள் எல்லோரும்; அவனை எதிர்த்து அழிக்கலாம் என்று திட்டமிடுவதா? என்னுடன் பிறந்தவனை நானே அழிப்பதா!’ அவன் உடம்பு சற்றே குலுங்கியது. அப்படி நினைக்கவே அவன் அஞ்சினான்.

‘அவனை வென்று நாட்டைக் கைப்பற்றிக் கொண்டு ஓட்டிவிடலாம் என்று சிலர் சொல்லக் கூடும். நானே கொடுத்த நாட்டை நானே மீண்டும் பெற்றுக்கொள்வதா? கொடுத்ததை வாங்கும் இழிவான செயலை இதுவரையில் நான் செய்ததில்லை. இரந்தவர்களுக்கு எதிரே இல்லை என்று சொல்வதை விட அது மிகவும் இழிந்த செயல்.’ அவன் தன் தம்பிக்காக இரங்கினான்; பின்பு சினங் கொண்டான். ‘போர் செய்வதா, இல்லையா?’ என்ற கேள்வி அவன் உள்ளத்தைக் கொக்கி போட்டு இழுத்தது.

‘போர் செய்தால் ஒன்று வெல்ல வேண்டும்; அல்லது தோல்வியுறவேண்டும். வென்றால் கொடுத்ததை மீட்டும் பெற்ற பாவம் வரும்; தோற்றால் பழி உண்டாகும். வென்றாலும் பாவம், தோற்றாலும் பழி என்பது உறுதியானால் ஏன் போர் செய்யவேண்டும்?’ இப்படி அவனுடைய சிந்தனை திரும்பியது. நீர்ச் சுழியிலே சிக்கிச் சுழலும் துரும்பு போல உள்ளம் சுழன்று தடுமாறியது.