பக்கம்:குமண வள்ளல்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

குமண வள்ளல்

தவம் புரியலாம்' என்ற நெறியில் அந்தக் குண மலையின் உள்ளம் எண்ணமிட்டது. 'இனி நமக்குத் துறவியைப் போன்ற வாழ்க்கையே தக்கதென்று இறைவனே நியமித்திருக்கிறான். அரசனாகப் பிறந்தமையால் பொருளும் இன்பமும் நமக்கு உரிமையாக இருந்தன. பொருளைக் கொண்டு அறம் செய்தோம். இனி வீட்டு நெறிக்கு வேண்டியதைச் செய்யவேண்டும் என்பது இறைவனது திருவுள்ளம்போலும்!' என்று நினைந்து அமைதி பெற்றான். அரசைத் துறப்பதற்கு ஆயத்தமானான்.

இந்தச் செய்தியைக் கேட்ட மக்கள் உள்ளம் குலைந்தனர். இராமரைக் காட்டுக்கு ஓட்டிய கைகேயியிடம் அயோத்திவாசிகளுக்கு உண்டானது போன்ற கோபம் இளங்குமணனிடம் மூண்டது. "என் தம்பி நாட்டை ஆளும் திறத்தில் சிறந்தவன். அவன் உங்களையெல்லாம் நன்றாகப் பாதுகாப்பான். நான் அவனுக்கு நாட்டைக் கொடுத்துச் செல்வதனால் உண்டாகும் பயன் நீடிக்க வேண்டுமானால் என்னிடம் நீங்கள் காட்டும் அன்பை அவனிடமும் காட்ட வேண்டும். ஒரு குளத்தில் பூத்தவர்கள் நாங்கள். எங்களுக்குள் வேறுபாடு இல்லை. ஆகையால், எனக்கு விடை கொடுங்கள்" என்று குமணன் வேண்டிக்கொண்டான். அதைக் கேட்டுக் கல் மனமும் உருகியது. மகளிர் இரங்கினர். குழந்தைகளும் அழுதன.

குமணன் நாடு துறந்து காட்டுக்குப் போய்விட்டான். இளங்குமணன் போரின்றியே நாடு முழுவதையும் தனதாக்கிக் கொண்டு ஆட்சி புரியலானான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/92&oldid=1359249" இலிருந்து மீள்விக்கப்பட்டது