பக்கம்:குமண வள்ளல்.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாள் தந்த வளம்

89

கண்டு அஞ்சும் படையைக் குவிக்க முடிந்தது. நாடு முழுவதும் நம் கைவசப்பட்ட இப்போது முயன்றால் எளிதில் பெரிய படையைச் சேர்த்துவிடலாம். நம்முடைய அரண்களையும் பலப்படுத்த வேண்டும்” என்பது ஒருவனுடைய யோசனை.

“இவ்வளவு காரியத்தையும் விரைவாகச் செய்ய முடியாது. சில காலமாவது ஆகும். இந்த நாட்டில் உள்ளவர்கள் பழைய ஒட்டுறவை இன்னும் மறக்கவில்லை. அண்ணனிடம் வைத்திருக்கும் பாசம் போவதற்கு இன்னும் சில காலம் ஆகும். ஆதலின், படையைப் பெருக்குவது, அரண்களை வலியுறச் செய்வது என்ற பெரிய காரியங்களைச் செய்யாமலே ஏதாவது குறுக்கு வழியைக் கண்டுபிடித்தால் நலமாக இருக்கும்” என்று மற்றொருவன் சொன்னான்.

“குறுக்கு வழி என்ன இருக்கிறது? என் அண்ணன் இறந்தொழிந்தால்தான் இத்தகைய அச்சத்துக்கு இடம் இல்லாமல் போகும். அவனைத் தொலைப்பதற்கு வழி ஏதாவது இருந்தால் கவனிக்கலாம்” என்று வன்கண்ணனாகிய இளங்குமணன் கூறியபோது அவனுடைய நண்பர்களே சிறிது நடுங்கினார்கள்.

மறுபடியும் நெடு நேரம் யோசித்தார்கள். “நாம் நம் கையால் கொல்வதைவிட யாரையாவது கொல்லும்படி ஏவலாம்” என்ற முடிவுக்கு வந்தான் அந்தக் கொடுங்கோலன்.

“யார் அதைச் செய்வார்கள்? அவரைத் தீய எண்ணத்தோடு அணுகும் துணிவு யாருக்கும் வராது” என்று ஒருவன் கூறினான்.

“ஏன் வராது? பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும். அவனுடைய தலையைக் கொண்டு வருகிற-