பக்கம்:குமண வள்ளல்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

குமண வள்ளல்

வர்களுக்கு நூறாயிரம் பொன், கோடி பொன் என்று கொடுப்பதாக இருந்தால் நாளைக்கே நம் காலில் அவன் தலை வந்து உருளும்” என்று இளங் குமணன் சொன்னன்.

அந்தப் பேய்ச் சபையில், குமணன் தலையைக் கொணர்பவருக்கு நூறாயிரம் பொன் கொடுப்பதென்று தீர்மானமாயிற்று. இந்தச் செய்தியைத் தூதுவர்கள் மூலம் பரப்புவதென்றும் முடிவு செய்தனர்.

செய்தி பரவியது. மக்கள் துடித்தனர். “அவன் தலையைக் கேட்கும் இந்தப் பாவியின் தலையை உருளச் செய்வோம்” என்று கோபத்தால் குதித்தனர் பலர். படை வீரர்களைக் கொண்டு அத்தகையவர்களை அடக்கினான் இளங் குமணன். நல்லோர், ‘இனி இங்கே இருப்பது தகாது’ என்று எண்ணிவேற்று நாட்டுக்குப் போய் வாழத் தலைப்பட்டனர். ‘மாபாவி! அசுரன்! பேய்! கொலைகாரன்!’ என்ற விருதுப் பெயர்களை மக்கள் தம் மன்னனுக்குச் சூட்டினர்.

காட்டில் குமணன் துறவு வாழ்க்கை வாழ்ந்தான். அங்கும் அவனைப் பார்க்க மக்கள் வந்தனர். புலவர்களும் வந்தார்கள். செல்வர் அவனை அறியாமலே அவனுக்கு வேண்டிய பொருள்களை வைத்துச் சென்றனர். தனக்கு நாடாட்சி இல்லாமற் போய்விட்டதே என்று அவன் வருந்தவில்லை. நல்ல உணவு உண்டு பஞ்சணையில் படுத்து உறங்கவில்லையே என்றும் கவலைப்படவில்லை. புலவர்களோடு பழகி அவர்களுக்குத் தக்க வண்ணம் பரிசில் வழங்கி இன்பமுற வழியில்லையே என்றுதான் அவன் வருந்தினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/96&oldid=1362754" இலிருந்து மீள்விக்கப்பட்டது