பக்கம்:குமண வள்ளல்.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாள் தந்த வளம்

19

யாரேனும் புலவர்கள் வருவார்கள். பெருஞ் சித்திரனார் தேடி வந்து பேசிச் சென்றார். புலவர்களைக் காணும்போதெல்லாம் அவர்களுடன் பேசி இன்புறுவதைக் காட்டிலும், ‘இவர்களுக்கு ஒன்றும் கொடுக்க முடியாத நிலையில் இருக்கிருேமே!’ என்ற வருத்தமே மிகுதியாக உண்டாகும். அந்த நிலையிலும் தன்னிடம் ஏதாவது இருந்தால் அதை வற்புறுத்திப் புலவர்களிடம் கொடுத்துவிடுவான்.

நாட்டிலுள்ள மக்களிற் சிலர் அவனிடம் வந்து அழுதார்கள். இளங் குமணன் தமக்கு ஏதேனும் தீங்கு புரிவான் என்ற அச்சத்தால் அவர்கள் வருவதை நிறுத்திக்கொண்டார்கள். ஒரு நாள் அங்கே வந்த ஒருவர், குமணன் தலையைக் கொண்டு வருபவர்களுக்குப் பரிசு தருவதாக இளங் குமணன் அறிவித்திருக்கும் செய்தியைச் சொல்லி, “இந்த மாபாவி இன்னும் வாழ்கிறானே! கடவுள் இதையும் பார்த்துக்கொண்டிருக்கிறாரே! அறம் இருக்கிறதா, செத்துப் போய் விட்டதா?” என்று புலம்பினார்.

குமணன் அதைக் கேட்டு வருந்தவில்லை. அவன் வரவரத் துறவுள்ளம் பெற்று வந்தான். “அப்படியா சொல்லியிருக்கிறான்? அதுவும் நல்லதுதான். இந்த உடம்பு எதற்கும் உதவாதது என்று பெரியவர்கள் சொல்வார்கள். இதில் ஓர் உறுப்பாகிய என் தலைக்கு விலை கொடுப்பதாகச் செல்லுகிறானா? நல்லது. இந்தத் தலை ஒரு வறியனுடைய துன்பத்தைப் போக்குமானல், அவன் சொன்னதைப் பாராட்டுகிறேன். இறைவன் திருவருளானையின்படியே எல்லாம் நடக்கும்” என்று அமைதியாகப் பேசினான் அவன்.