பக்கம்:குமரப் பருவம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

குமரப் பருவம்

ஆனால், அதே வேகத்தில் அது தொடர்ந்து கடைசிவரை நடைபெறுவதில்லை. வயது ஏறஏற உடல் வளர்ச்சி வேகம் குறைந்து பிறகு நின்று போகிறது. அதன் காரணம் ஆச்சரியமாக இருக்கும்.

           பிட்டூட்டரிச் சுரப்பி இனப்பெருக்கச் சுரப்பிகளைத் தூண்டுகின்றதல்லவா? இனப்பெருக்கச் சுரப்பிகள் தங்கள் வேலையை வேகமாகத் தொடங்கிய பிறகு அவை பிட்டூட்டரியின் மேலேயே கொஞ்சம் ஆதிக்கம் செலுத்தத் தொடங்குகின்றன; உடல் வளர்ச்சிக்கான பிட்டூட்டரிச் சுரப்பு நீரின் சக்தியை மெதுவாகக் குறைத்துக்கொண்டே வந்து கடைசியில் முழுவதும் ஒடுக்கிவிடுகின்றன.
           அப்படிச் செய்வது நல்லதுதான். அளவாக உடம்பு வளர வேண்டுமே ஒழிய வளர்ந்துகொண்டே போகக்கூடாது. ஆனால், போதுமான அளவு இந்த வளர்ச்சிக்குரிய சுரப்புநீர் சிறுவயதிலும், மலர்ச்சி யெய்தும் பருவத்திலும் உண்டாகாவிட்டால் ஆணோ பெண்ணோ வளர வேண்டிய உயரத்திற்கு வளராமல் குட்டையாக இருப்பார். மலர்ச்சி யெய்தும் காலத்தில் இனப்பெருக்கச் சுரப்பு நீர் போதிய அளவு உண்டாகாவிடில் அதனால் வளர்ச்சிக்குரிய சுரப்பு நீரின் சக்தியைக் குறைக்க முடியாது போய்விடும். அப்பொழுது உடம்பின் வளர்ச்சி நீண்டநாளுக்கு நடைபெற்றுக் கைகளும், கால்களும் அதிகம் வளர்ந்துபோகும். உடம்பின் தோற்றமே அவ்வளவு திருப்தியாக அமையாது. ஆதலால் பிட்டூட்டரியும், இனப்பெருக்கச் சுரப்பிகளும் ஒன்றுக்கொன்று உதவியாக நின்று அளவோடு தங்கள் வேலையைச் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/17&oldid=1230360" இலிருந்து மீள்விக்கப்பட்டது