பக்கம்:குமரப் பருவம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மலர்ச்சி விளைவுகள்
19
         பெண் மலர்ச்சி யெய்தியதற்கு அறிகுறியாக முதலில் மாதவிடாய் ஏற்படுகிறது. மாதவிடாயைப்பற்றி முன்பே அறிந்து கொள்ளாத பெண்கள் திடீரென்று இரத்தம் வெளிப்படுவதைக் கண்டு பீதியடைய நேரிடலாம். இரத்தக் குழாய்கள் உடைந்து இவ்வாறு ஏற்படுவதாகவோ, அல்லது ஏதோ பெரியதோர் தீங்கு நேரிட்டுவிட்டதாகவோ அவர்கள் எண்ணிப் பயப்படலாம். இவ்வாறு அஞ்சவேண்டியதில்லை என்று அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். மாதவிடாய் தொடங்குவது இயல்பானதோர் நிகழ்ச்சி என்பதைத் தாய்மார்கள் அவர்களுக்கு நயமாக முன்னதாகவே தெளிவுபடுத்துதல் நல்லது.
         மாதவிடாயில் வெளியாகும் சூதகம் முழுவதும் இரத்தம் என்று கருதுவது தவறு. கருப்பையின் உட்பாகம் சுமார் 28 நாட்களுக்கு ஒரு முறை புதிதாக அமைந்து என்றும்இளமையோடிருக்க முயல்கிறது. அவ்வாறு அமைவது கருத்தரிக்கின்றபோது அக்கருவை நன்கு வளர்ப்பதற்குத் துணையாகிறது.
         கருப்பையின் உட்புறச் சுவர் சிதையும்போது அங்குள்ள சிறுசிறு இரத்தக் குழாய்களிலிருந்து இரத்தமும் மூக்கிலிருந்து வெளிப்படும் சளிபோன்ற நொங்குப் பொருளும், கருவை வளர்ப்பதற்காகச் சேமிக்கப்படும் சுண்ணாம்புச் சத்துப் போன்ற சில பெருள்களும் சிதைந்த அணுத்திசுக்களும் சூதகமாக வெளிவருகின்றன. சுமார் 4 அல்லது 5 நாட்களுக்குச் சூதகம் வெளியாகும். மொத்தத்தில் சுமார் 2 அவுன்சுக்கு மேலிராது. இதில் நொங்கு போன்ற பொருளே மிகுதியாக இருக்கும்.
         மலர்ச்சி யெய்திய தொடக்கத்திலே மாதவிடாய் ஏற்படுவதில் சரியான ஒழுங்கு இராது. காலம் தாழ்ப்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/20&oldid=1230405" இலிருந்து மீள்விக்கப்பட்டது