பக்கம்:குமரப் பருவம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

குமரப் பருவம்

மல்ல என்பது பொருள். ஆனால், உண்மையில் அவள் 'பெரிய மனுஷி' ஆகிவிடவில்லை. "குமரப் பருவத்தை எட்டிப் பிடித்திருக்கிறாள்: அதன் முடிவிலே பெரிய மனுஷியாக மலர்வாள்" என்பதே இக்காலத்திய மனத்தத்துவக் கருத்தாகும்.

        சுருங்கக் கூறினால் உடலுறுப்புக்களின் வளர்ச்சியை மட்டும் இன்று குமரப் பருவம் குறிப்பதில்லை. உள்ளத்திலும், உள்ளக்கிளர்ச்சிகளிலும், சமூக ஒழுங்குக்கேற்ற நடத்தையிலும் முதிர்ச்சியடைவதையும் அது குறிக்கின்றது. ஆகவே, குமரப் பருவம் ஒரு நீண்டகால எல்லைக்கு உட்பட்டதாகும். இனப்பெருக்கத்திற்கு ஏற்ற சக்தி விரைவிலே ஏற்பட்டுவிடலாம்; உடலிலே முதிர்ச்சியும் முன்பாகவே உண்டாகலாம்; ஆனால் மனச்சக்திகளிலே முதிர்ச்சி சற்றுப் பின்பே ஏற்படுகிறது. அந்த முதிர்ச்சியும் ஏற்பட்ட பிறகே ஒருவனை முதிர்ந்த ஆடவன் என்றும், ஒருத்தியை முதிர்ந்த மங்கை என்றும் கூறலாம்.
வளர்ச்சியில் வேகம்
        குழந்தை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்கின்றது என்று நாம் சொல்லுகின்றோம். இந்த வளர்ச்சி மலர்ச்சி யெய்துவதற்குச் சற்று முன்னால் திடீரென்று வேகமாகத் தொடங்குகிறது.
        பெண்கள் ஆண்களைவிட விரைவில் மலர்ச்சி யெய்துவதால் இந்த வேகமான வளர்ச்சி முதலில் அவர்களிடையே காணப்படும். ஆண்களிடையே இது சற்றுப் பின்னர்த் தோன்றிப் பெண்களிடையே வளர்ச்சி அநேகமாக நின்ற பிறகும் சிறிது காலத்திற்குத் தொடர்ந்து நடைபெறுகிறது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/9&oldid=1230252" இலிருந்து மீள்விக்கப்பட்டது