உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

குமரியின் மூக்குத்தி



'அப்படியானால்-' கல்யாணி இழுத்ததை ஊகித்துக் கொண்ட கமலம், உங்களுக்குச் சுந்தரேசன் என்ற எழுத்தாளரைத் தெரியுமோ?' என்று கேட்டாள்.

“நன்றாகத் தெரியும்”” என்று பதில் வந்தது.

"இவள் சொல்கிறாள்; அது அவருடைய சொந்தப் பெயராக இருக்காது என்கிறாள்” என்று கமலம் சொன்ன போது, 'அட! அது எப்படி உனக்குத் தெரிந்தது?’ என்று கல்யாணியையே கேட்டான் ராமகிருஷ்ணன். அவன் ஆச்சரியத்துள் மூழ்கினான்.

'அவர் எழுத்திலிருந்து ஊகித்தேன்’ என்றாள் கல்யாணி. தன் ஜோசியம் பலித்ததைப் பற்றி அவளுக்கு உள்ளுர மகிழ்ச்சி பொங்கியது.

'அப்படியானல் அவளுடைய சொந்ததப் பெயர் என்ன?’ என்று கமலம் கேட்டாள்.

"அவனுடைய பெயரைத்தானே கேட்கிறாய்?"

"அவன் ஏது? "நீ கேட்பது எனக்கு விளங்கவில்லையே

'கல்யாணியின் ஊகம் உங்களுக்குப் புரிந்ததோ? யாரோ ஒரு பெண்தான் அந்தப் புனைபெயரில் எழுதுகிறாள் என்றல்லவா அவள் சொல்கிறாள்?' என்று கமலம் விஷயத்தை விளக்கினாள்.

அதைக் கேட்டவுடன், 'பெண்ணா?' என்று ராம கிருஷ்ணன் இடிஇடி யென்று சிரித்தான்.

'நல்ல ஜோசியம்! ஏன் அப்படி எண்ணினாய்?' என்று கல்யாணியைக் கேட்டான் அவன். :

கமலமே கல்யாணியின் கட்சியை விளக்கினாள். பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த ராமகிருஷ்ணன், 'இன்று எனக்கு ஒரு லாபம் கிடைத்தது” என்றான்.

"என்ன லாபம்?

"இனிமேல் நான் சுந்தரி என்ற புனைபெயரில் எழுதலாம் என்று தோன்றுகிறது.'