பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



திருட்டுக் கை

ழக்கம்போல அன்று தங்கவேலன் தன் எசமானர் குழந்தைகளைப் பக்கத்துத் தெருவில் இருந்த பள்ளிக் கூடத்துக்கு அழைத்துக் கொண்டுபோய் விட்டான். சரியாகப் பத்து மணிக்கு அவன் நாள்தோறும் சாமிநாத முதலியாருடைய - அவர்தாம் தங்கவேலனுடைய எசமானர் - அவருடைய ஏழு வயசுப் பையனையும் அவன் தங்கையையும் பள்ளிக்கூடத்துக்குக் கொண்டுவந்து விட்டுப் போவான். அடுத்த தெருவுக்குப் போகக் கார் எதற்கு என்று குழந்தையைத் தங்கவேலனுடன் அனுப்பினார்கள்.

அன்றும் அப்படிப் போனவன் ஒரு புதிய அநுபவத்துக்கு உள்ளானான். அவனுடைய பருவம் அன்று தலை காட்டியது. அந்தப் பள்ளிக்கூடத்துக்கு வரும் மற்றக் குழந்தைகளையும் அந்த அந்த வீட்டு வேலைக்காரனோ, வேலைக்காரியோ கொண்டுவந்து விட்டார்கள். யாரோ ஒரு குழந்தையை அழைத்துக்கொண்டு ஒரு பெண் - பதினெட்டு வயசு இருக்கும்-வந்தாள். வந்தவள் தங்கவேலனுடன் இரண்டு குழந்தைகளைப் பார்த்ததும், 'என்ன துரை, செளக்கியமாக இருக்கிறாயா?” என்று கேட்டாள். "பொன்னம்மா!' என்று பையன் ஆச்சரியத்தோடு சொல்லிக்கொண்டே பார்த்தான்.

அவன் பார்த்தது கிடக்கட்டும்; தங்கவேலனும் அவளைப் பார்த்தான்; பிரமித்துப் போய்விட்டான். அவன் கண்ணுக்கு அவளுடைய அழகிலே வசியமருந்து இருந்தது. அவள் குறுகுறுத்த முகமும், வளப்பமான மேனியும் அவன் உள்ளத்திலே பதிந்துவிட்டன.

'நீ ஏன் எங்கள் வீட்டுக்கு வருகிறதில்லை?" என்று கேட்டான் துரை.