பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருட்டுக் கை

137



சொல். நான் ஒன்று கேட்கிறேன். எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். பதினெட்டு வயசு ஆயிற்று. கண்ணுக்கு நன்றாக இருப்பாள். உன்னைக் கண்டது முதல் நீ நல்ல உழைப்பாளி என்றும், கண்டிப்பானவன் என்றும் தெரிந்து உன்னிடம் அபிமானம் ஏற்பட்டு விட்டது. அதனால் சொல்கிறேன். கட்டிக் கொள்கிறாயா? இல்லை, ஏதாவது முறைப்பெண் ஊரில் இருக்கிறதா?”

தங்கவேலனுக்கு அப்படி முறைப்பெண் ஒருத்தியும் இல்லை. ஆனால் அவன் மனசுக்குள் பாக்கியத்தின் மகள் வந்து நின்றாள். என்ன பைத்தியக்காரத்தனம் இது? சண்டை போட்ட வீட்டில் உள்ள பெண்ணைப் பற்றி நினைக்க நமக்கு என்ன உரிமை? என்ற நினைவு அடுத்து வந்தது.

முனிசாமி எப்படியாவது தன் காரியத்தைச் சாதித்துக் கொள்வதாகத் தீர்மானம் செய்துவிட்டான். மெல்ல மெல்லத் தங்கவேலனை வழிக்குக் கொண்டுவரலானான். "உனக்கோ அப்பன், அம்மா, உறவு ஒட்டு இல்லை. நீ கல்யாணம் பண்ணிக்கொண்டால் எம் வீட்டிலேயே இருக்கலாம். எனக்கும் மகன் யாரும் இல்லை. என் வீட்டுக்கு வருகிறாயா?” என்று கேட்டான்.

"பார்க்கலாம்” என்று தங்கவேலன் சொன்னான்.

இரண்டு நாட்களில் பார்த்தேவிட்டான். பார்த்தது மாத்திரமா? பார்த்தபோது அவனுக்கு இருந்த மனநிலையை என்னவென்று சொல்வது! திடுக்கிட்டான் என்று சொல்லலாமா? பிரமித்துப் போனான் என்பதா? வெட்கப்பட்டான் என்பதா? ஐயோ, இப்படி ஏன் செய்தோம் என்று இரங்கினானா? இது என்ன உண்மைதான என்று சந்தேகப்பட்டான?-இந்த உணர்ச்சிகள் யாவும் ஒன்றன்பின் ஒன்றாக வந்தன. அவன் உள்ளத்தில் ஒரு பெரும் புயல் அடித்தது. இந்த உணர்ச்சிகள் மாறி மாறிப் பிரசண்ட மாருதமாக வீசின. என்று சொல்லலாம்.