பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

குமரியின் மூக்குத்தி


கொங்கு வேளாளர்கள் வேட்டையாடி முயல்களையும் நரிகளையும் கொன்று அவற்றைக் கையில் பிடித்துக் கொண்டு கூட்டமாக வருவார்கள். பல ஊர்களிலிருந்து வருவார்கள். வண்டிகளில் மனைவி மக்களை ஏற்றிவிட்டு ஆடவர்கள் நடந்தே வருவார்கள் வந்து ஆடிப் பதினெட்டன்று காவிரியில் நீராடிக் குமரீசுவரரைத் தரிசித்து இன் புறுவார்கள். காவிரிக் கரையிலேயே வண்டியை நிறுத்தி விட்டு, அருகில் மூன்று கல்லைக் கூட்டி அவர்களுடைய வீட்டுப் பெண்கள் சமையல் செய்வார்கள். அந்த உணவை உண்டு அன்று இரவு அங்கே தங்கி மறுநாள் விடியற் காலையில் வண்டியேறிப் போய்விடுவார்கள்.

சிலர் குடத்தில் காவிரி நீரை எடுத்துக்கொண்டு அதன் மேல் மாவிலைக் கொத்தைச் செருகித் தலையில் வைத்துக் கொண்டு கூட்டமாகச் செல்வார்கள். காவிரிக்கு வர இயலாமல் ஊரிலே தங்கினவர்களுக்கும் காவிரி நீராடும் புண்ணியம் கிடைக்கவேண்டும் அல்லவா?

ஆடிப் பதினெட்டன்று மோகனூர் வீதிகளில் எள்போட்டால் எள் விழாது; அவ்வளவு கூட்டம். வீதியோரத்தில் எல்லாம் கடைகள் வந்திருக்கும்; காதோலை கருகு மணி ஒருபக்கம் குவியலாக இருக்கும்; தேங்காய்பழம் ஒரு புறம், கடலைபொரி ஒரு பக்கம். அன்று ஒரே கோலாகலந்தான். அன்றன்று கூலிவாங்கிப் பிழைக்கும் ஏழைப் பெண்களும் நெடுங்துாரத்திலுள்ள பட்டிக்காட்டிலிருந்து வருவார்கள். வாரந்தோறும் சங்தைக் நெடுவில் கூலிவாங்கும்போது ஓரணா, இரண்டணாவைத் தனியே ஒரு மண் குடுவையில் போட்டுவைப்பார்கள்; ஆடிப் பதினெட்டுக் குக் காவிரியில் முழுகத்தான்.

அப்போதெல்லாம் மேட்டுர் அணை வராத காலம், ஆடி மாதம் இருகரையும் புரண்டு வெள்ளம் ஒடும். மோகணுார்க் கோயில் ஆற்றங்கரையிலேயே இருக்கிறது. அங்கே பதினெட்டுப் படிகள் அமைத்திருக்கிறார்கள்.