பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

குமரியின் மூக்குத்தி



"சாமிக்கு முன்னாலேதானே ஆடறாள்?' என்றான் மாரப்பன். -

பழனியாயிக்கு அது சம்மதமாகவே படவில்லை. மானத்தை விட்டு ஆடுவதாவது! -

'நீ வந்து பாத்தாத் தெரியும்' என்றான் கவுண்டன்.

அடுத்த வருஷம் மாரப்பன் தன் மனைவியையும் அழைத்துக்கொண்டு போயிருந்தான். இரண்டு மூன்று நாள் தங்கினான். சாமியைப் பார்த்துப் பார்த்து இன்புற்றாள் பழனியாயி. ஆனால் சதிர்க்கச்சேரியைக் கண்ட போது அது அவளுக்கு ரசிக்கவே இல்லை. என்ன மானங்கெட்ட வேசம்' என்றே அவளுக்குத் தோன்றியது. பூங்காவனம் என்பவள் அன்று நடனம் ஆடினாள். ஊர்ப் பெரிய தனக்காரர்கள் அவளுக்கு அவ்வப்போது வெற்றிலையில் பணம் வைத்து நீட்டினார்கள். அவுள் ஒய்யாரமாக நடந்து வந்து, தன் கை அவர்கள் கையில் படும்படி குனிந்து வாங்கி ஒரு புன்சிரிப்பை அவர்கள்மேல் வீசிவிட்டுப் பின்நோக்கி நடந்து சென்றாள்.

"என்ன கவுண்டரே, சம்மா இருக்கிறீரே. இங்தாரும் வெற்றிலைபாக்கு!" என்று குருக்கள் தூண்டிவிட்டார். அவருக்கு நாலு பேர் உற்சவத்தில் உற்சாகமாகக் கலந்துகொள்ள வேண்டுமென்ற ஆசை. பூச்சுற்றி முகஸ்துதி செய்து காரியத்தைச் சாதித்துக் கொள்வதில் பெரிய பேர்வழி.

மாரப்பனுக்குத் தைரியம் உண்டாகவில்லை. அவன் உள்ளத்தில் ஏதோ ஒரு வகையான அருவருப்புத் தட்டியது. பெரியவர்கள் இருக்கும்போது, நான் எதற்கு?" என்று மெல்ல இழுத்தான். குருக்கள் விடவில்லை. 'என்ன ஐயா, ஏமாற்றுகிறீர்? ஊரில் பெரிய பண்ணைக்காரர். அஞ்சு ரூபாயாக வைத்துக் கொடும்” என்றார், அவருக்கும் கவுண்டருக்கும் இப்போது பழக்கம் அதிகம் அல்லவா?