பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

குமரியின் மூக்குத்தி



மறு நாள் காலையில் இருவரும் ஊர்போய்ச் சேர்ந்தார்கள். சேர்ந்தவுடன் பழனியாயி மாரப்பன் காலில் விழுந்து அழுதாள். 'நீ எவுத்துக்கிட்டுப் போனாலும் ரவைக்கு இங்கே வந்துவிடவோணும். குமரீசுபரன் சாக்கியாகச் சத்தியம் பண்ணித் தா!' என்று கேட்டாள்.

"பைத்தியமே, உனக்கு ஏன் இந்தச் சந்தேகம் எல்லாம். நான் உன்னை விட்டு எங்கே போகப் போகிறேன்?" என்றான் மாரப்பன்.

"ஆம்பிள்ளைகளை மயக்க வெக்கங்கெட்ட பொம்பிள்ளைகள் செய்யற மோசடியைக் கண்ணாலே கண்டப் பறம் எனக்குப் பயம் பிடிச்சுக்கிட்டுது” என்று அவள் அழுதாள். அவன் அவளுக்குச் சத்தியம் பண்ணித் தந்தான்.

***

நாம் நினைக்கிறபடியே எல்லாம் நடக்கின்றனவா? அடுத்த முறை மாரப்பக் கவுண்டன் மோகனூர் போயிருந்தபோது எதிர்பாராதபடி அங்கே தங்க நேர்ந்தது. அன்று கோயிலில் ஒரு விசேஷமும் இல்லை. குருக்கள் பெண் ணுக்குக் கல்யாணம். மாரப்பக் கவுண்டனுக்கும் அழைப்பு அனுப்பியிருந்தார். கவுண்டன் முகூர்த்த நேரத்துக்கு வர முடியவில்லை. பின்புதான் வந்தான். குருக்கள், ராத்திரி இருந்து, சாப்பிட்டுவிட்டுத்தான் போகவேண்டும்' என்று வற்புறுத்தினார். சாப்பிட்டுவிட்டுப் போக முடியுமா? இரவு தங்கிவிட்டு மறுநாள்தான் போகவேண்டும். -

இரவு தங்குவதா? பழனியாயிக்குச் செய்து கொடுத்த சத்தியம் என்ன ஆவது? அவனுக்கு ஒன்றுமே தோன்றவில்லை. குருக்களிடம் இந்த ரகசியத்தை அம்பலப்படுத்துவதா? இன்று ஒரு நாளில் என்ன வந்துவிடப் போகிறது? என்று ஒருவிதமாகச் சமாதானம் செய்துகொண்டு அங்கே தங்கினான்.