பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/147

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புகிய வீடு

141



மறு நாள் ஊர்போய்ச் சேரும்போது காலை மணி பத்துக்குமேல் ஆகிவிட்டது. பழினியாயி தரையில் படுத்துக் கொண்டிருந்தாள். இரவில் தூக்கம் இல்லை. அவனுக்காகக்காத்திருந்து காத்திருந்து சாப்பிடவும் இல்லை.ஊனும் உறக்கமும் ஒரு வேளை இல்லாமற் போவதால் ஒன்றும் ஆபத்து வந்துவிடாது. அவள் மனத்தில் இருந்த சந்தேகப்பேய் ஒவ்வொரு கணத்தையும் ஒவ்வொரு யுகமாகப் பெருக்கிக் காட்டியது. அதோடு இப்போது மற்றொரு கவலையும் அவளுக்கு உண்டாகிவிட்டது. குமரீசுவரர் ஆணையாகச் சத்தியம் செய்து கொடுத்தானே? அதை யல்லவா இப்போது மீறிவிட்டான்? சாமி குற்றம் வேறு; அவனுக்குத் தண்டனை கிடைக்குமே! எல்லாம் சேர்ந்து அவளை ஒரே திகிலுருவாக்கி விட்டன.

மாரப்பன் வீட்டுக்குள் நுழைந்தானோ இல்லையோ, அவன் காலடியில் வந்து விழுந்தாள், அப்படியே மூர்ச்சையாகி விட்டாள். வெள்ளையுள்ளம்: சைத்தியோபசாரம் செய்து அவளை எழுப்புவதற்குள் அவனுக்கு என்ன என்னவோ நினைவுகள் வந்துவிட்டன.

'இனி இவளை விட்டுப் பிரிவதே இல்லை, பகலிலுங் கூட என்று தீர்மானம் செய்து கொண்டான்.

அப்படியானல் காவிரி நீராட்டு குமரீசுவரர் தரிசனம்? மாரப்பக் கவுண்டனுக்குப் புதிய யோசனை தோன்றியது. தானும் அந்தக் கரை வழிக்கே போய் இருந்துவிட்டால்? மோகனூரில் கொங்குவேளாளர் யாரும் குடியிருக்கவில்லை. வெளியூர்களில்தான் இருந்தார்கள். அயலில் சிறிய கிராமங்களில் இருந்தார்கள். தானும் அருகே ஓரிடத்தில் இருக்கலாம். உறவினர் இல்லாத இடத்தில் ஒரு பெண் பிள்ளைக்காகப் போய் இருந்து கொண்டு, பழைய ஊரை மறப்பதா? அவன் உள்ளத்தே போராட்டம் எழுந்தது.