பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

குமரியின் மூக்குத்தி

 பழனியாயிடம் அவன் தன் விருப்பத்தைத் தெரிவித்தான். மோகனூருக்குக் கிழக்கே ஒரு மைல் தூரத்தில் தனியே வீடு கட்டிக்கொண்டு வாழலாம் என்று தீர்மானித்தான். வேறு யாராவது உறவினர் வந்தாலும் வீடு கட்டிக் கொடுத்து விடலாம் என்றும் சொன்னான். பழனியாயிக்குத் தன் ஊரை விட்டுச் செல்ல விருப்பம் இரா தென்றுதான் அவன் நினைத்தான்.

ஆனால் அவள் உடனே ஒப்புக்கொண்டுவிட்டாள். 'எனக்கும் இனிமேல் காட்டுக்குப் போய் வேலை செய்ய முடியாது. தனியாக உன்னோடு இருப்பது நல்லதுதான். அம்மாவை ஊரிலிருந்து வரவழைத்துக்கொள்கிறேன்' என்று அவள் சொன்னபோதுதான் மாரப்பக் கவுண்டனுக்கு உண்மை விளங்கியது. அவளை அநாவசியமாகப் பீதியடையச் செய்துவிட்டோமே என்று வருந்தினான்.

பண்ணைக்காரர் ஊரை விட்டுப் போகப் போகிறார் என்பதை அறிந்த ஊர்க்காரர்கள் மிகவும் வருத்தம் அடைந்தார்கள். 'நான் அடிக்கடி இங்கே வருகிறேன். இங்கே ஆறு மாசம், அங்கே ஆறு மாசம் தங்கினால் போகிறது” என்று கவுண்டன் சொன்னான்.

3

மோகனூருக்கு அருகில் ஒரு பெரிய வெளி இருந்தது. அதை விலைக்கு வாங்கினான். வீட்டைக் கட்டிக் கொண்டான். உடன் வந்த இரண்டு மூன்று பேர்களுக்கும் வீடு கட்டிக் கொடுத்தான். அந்த இடத்துக்கு ஒரு பேர்வைக்க எண்ணியபோது பழனியாயி, "குமரிபாளையம் என்று வையுங்கள்' என்றாள்; “குமரீசுவரன் கண்கண்ட சாமி; அவன் பேர் இருக்கணும்" என்று விளக்கினாள் -

ஒரு மாதம் ஆன பிறகு அவள் தன் தாய் வீட்டுக்குப் போனாள். "ஆம்பிளைக் குழந்தையோடு பெத்துப் பொளைச்சு வா' என்று பெரியவர்கள் ஆசீர்வாதம் செய்தார்