பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

குமரியின் மூக்குத்தி

கொண்டு அந்த மூக்குத்தியைப் பற்றிப் பேசினன். ராணிமார்கள் ஒவ்வோர் ஆண்டு ஒவ்வொருவராக அணிய வேண்டும் என்று சொன்னார்கள். பட்டத்துத் தேவி அதற்கு இணங்கவில்லை. "இப்போது மூக்குத்திக்கு வந்த வழக்கே பின்பு சிங்காதனத்துக்கும் வரும். ஒவ்வோராண்டு ஒவ்வொருவராகப் பட்ட தேவியாக இருக்கலாமென்று சொல்வார்கள். இந்த மூக்குத்தி விஷயமாவது அந்தப்புரத் துக்குள் அடங்கியிருப்பது பட்டமகிஷிப் பதவி என்பது உலகமறிந்த செய்தி. இவர்கள் அதற்கும் உரிமை கொண்டாடி வருஷத்துக்கு ஒரு பட்டமகிஷி என்று வந்து விட்டால் உலகமே கைகொட்டிச் சிரிக்கும். ஆகையால் பட்டமகிஷி என்பதற்குரிய அடையாளமும், உரிமைகளும் சில உண்டு. அதை யாரும் மாற்றிக்கொள்ள முடியாது” என்று அவள் வாதிட்டாள். அதற்கு எதிர் கூற யாருக்கும் வாய் இல்லை.

மற்ற ராணிகள் எல்லாம் வீண் ஆசைப்பட்டு இதை ஒரு வழக்கமாகக் கொண்டு வந்ததைக் கண்டு மகாராணிக்கும் கோபம் கோபமாக வந்தது. 'மகாராஜா கொஞ்சம் அன்பாக இருக்கிறாரென்றால், அவர்களுக்குப் பேராசை பெருகிவிடுகிறது. அவர்கள் ஆசையில் மண்ணைப் போட வேண்டும் என்று அவள் எண்ணமிட்டாள். மெல்ல மெல்லக் குலோத்துங்கனுக்குப் பொய்யும் மெய்யும் சொல்லி ஒரு கருத்தை அவனிடம் தெரிவித்தாள்; அதற்கு அவனை இணங்கவும் செய்துவிட்டாள்.

பட்டத்துத் தேவி அணியும் அந்த வைர மூக்குத்தியை அவள் தன் மூத்த மகளுக்குச் சீதனமாகக் கொடுத்து விடுவதென்றும், இப்படியே மகளுக்குத் தாய் கொடுக்கும் சீதனமாகவே அது பரம்பரையாக இருந்து வரவேண்டுமென்றும் ஒரு சம்பிரதாயத்தை ஏற்படுத்திவிட்டாள். அம்பிகை கனவில் வந்து சொன்னதாகவும் வேறு காரணங்கள் இருப்பதாகவும் பட்டத்து ராணி சொல்லி இந்தத் தீர்