பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாயும் கன்றும்

21

போகிறாய்” என்று ஆறுதல் கூறினாள் அடுத்த வீட்டுக்காரி.

தனக்குப் பேரன் பிறக்கவேண்டும் என்ற ஆவல் அந்தக் கிழவிக்கு அதிகமாகத்தான் இருந்தது.அந்த ஆவலிலிருந்து நல்லம்மாள் மேல் கொஞ்சம் வெறுப்புக்கூட உண்டாகி விட்டது."மலட்டுப் பெண்ணைக் கட்டிக் கொண்டாயே!” என்று தன் மகனிடம் சில சமயங்களில் அலுத்துக்கொள்ளும் அளவுக்கு அந்த வெறுப்பு வளர்ந்தது. ஒரு நாள் நல்லம்மாள் காதில் இது விழுந்தது. அன்று முழுவதும் அவளுக்கு ஒன்றுமே வேண்டியிருக்கவில்லை. இரவு அவள் புருஷன் அவளைச் சமாதானப்படுத்தினான். அப்போது அவளுக்கு ஆத்திரம் தாங்கவில்லை."கன்றுக் குட்டிக்குப் பால் விடாமல் கறக்கிற கல் நெஞ்சக்காரர் களுக்குக் குழந்தை எப்படிப் பிறக்கும்?" என்று கேட்டு விட்டாள். இப்படி ஒருநாளும் அவள் பேசினதில்லை.பாலகிருஷ்ணனுக்கு அந்த வார்த்தை சுருக்கென்றது. அவன் அவளைக் கோபிக்கவும் இல்லை, சமாதானப்படுத்தவும் இல்லை.எதிர்வீட்டு ராமனுடைய பெண் தன் கணவனுடன் பிறந்த வீட்டுக்கு வந்திருந்தாள். அவள் பிள்ளைப் பேற்றுக்கு இங்கே வந்து போனவள்தான்; இரண்டு வருஷமாக வரவில்லை. அவள் வந்ததில் ராமனுக்கும் அவன் மனைவிக்கும் அளவற்ற சந்தோஷம். அவள் குழந்தை இரண்டு வருஷத்துக்கு மிஞ்சின வளர்ச்சி பெற்றிருந்தது; தத்தித் தத்தி நடந்தது.அங்கங்களெல்லாம் உருட்டித் திரட்டி விட்டாற்போல் இருந்தன. அந்தக் குழந்தையை எடுத்துக்கொண்டு வீதியிலே வந்து விற்பதிலே ஒரு தனி இன்பம் கண்டாள் ராமன் மனைவி. "எதற்காக அப்படிப் போய் நிற்கிறாய்? யார் கண்ணாவது படப் போகிறது!" என்று அவளுடைய மகள்-குழந்தைக்குத் தாய்-கூவினாள்.அந்தச் சமயம் பார்த்துத்தானா பாலகிருஷ்ணனுடைய தாய் அந்தக் குழந்தையைப் பார்க்க வேண்டும்? எதிர்வீட்டுக்காரி