குழலின் குரல்
மலையைச் சார்ந்த சிறிய ஊர் அது. அங்கே இயற்கைத் தேவி தன் முழு எழிலோடு வீற்றிருந்தாள்.மலையினின்றும் வீழும் அருவி எப்போதும் சலசலவென்று ஒலித்துக்கொண்டே இருக்கும்.மலர்,காய், கனி ஆகியவற்றுக்குக் குறைவே இல்லை. தினை,சாமை,வரகுமுதலிய தானியங்களும் நன்கு விளைந்தன.
இந்த அழகியசூழ்நிலையில் அவர்களுடைய காதல் வளர்ந்தது. இளமையும் எழிலும் நிறைந்த இணையாக இருந்தார்கள்: அவன் பெயர் முருகன்; அவள் பெயர் மெல்லியல். அவன் அவளைக் கொஞ்சலாக மெல்லி என்றே அழைப்பான். நாகரிகம் முளைக்காத காலம் அது. நகரம் என்பதையே அறியாத காலத்தில் நாகரிகம் எங்கிருந்து உண்டாகும்?
இலைகளையும் பட்டைகளையும் ஆடையாக உடுத்து மலரையும் வித்தையும் அணியாக அணிந்து மக்கள் இன்புற்றார்கள்.புறத் தோற்றத்தில் இன்று காணும் விரிவான பண்டங்களும்,அமைப்புகளும் அன்று இல்லை. ஆனால் இன்று மிக அருமையாக மக்களின் அகத்தே காணப்படும் அன்பும் அமைதியும் அக்கால மக்களின் உள்ளத்தில் விளங்கின.
மேலே சொன்ன மலைச்சாரற் சிற்றூரில் அமைதியாக வாழ்ந்த மக்களிடையே கதிரவனையும் திங்களையும் போல, அவ்விரண்டு காதலரும் வாழ்ந்தார்கள். அவர்களுக்குச் சுறுசுறுப்பாக மானையும் சிங்கத்தையும் போலத் துள்ளிக் குதித்து வேலை செய்தும், விளையாடியும் பொழுதுபோக்கத் தெரியும்; காதல் புரியத் தெரியும். கலகலவென்று சிரிக்