குழலின் குரல்
49
என்று கூவினான்;குதித்தான்; துள்ளி நாலுதிசையிலும் ஒடினான். குரல் எங்கிருந்து வருகிறது?
பூமியிலிருந்து வரவில்லை. பூமிக்கு மேலிருந்து வந்தது. மெல்லி மரத்தின்மேல் ஏறிக் கொண்டிருக்கிறாளோ?
உற்றுக் கவனித்தான்; கூர்ந்து மூச்சை அடக்கிக் கொண்டு கேட்டான். ஒலி மூங்கிற்புதரின் மேலிருந்து வருவதாக உணர்ந்தான். அண்ணாந்து பார்த்தான். ஆம்; நிச்சயமாக மெல்லி அந்த மூங்கிற் புதரின் மேலேதான் இருக்கிறாள். காற்று வேகமாக வீசியது; அந்தக் குரலும் சற்று உரத்துக் கேட்டது. அவனுக்கு ஒரே எக்களிப்பு. "மெல்லி, எங்கே இருக்கிறாய்?" என்று எழுந்து அங்கும் இங்கும் சுற்றினான்.அதன்மேல் ஏறிப் பார்க்கவேண்டு மென்று தோன்றியது.
மறுபடியும் அந்தக் குரல். அவன் வேகமாக மரத்தின் மேல் ஏறினான். உடம்பை அதன் முள் கிழித்தது. அதை அவன்பொருட்படுத்தவில்லை. மேலே ஏறினான். அந்த ஒலி சற்றே நின்றது. "மெல்லி!” என்று கூவினான்.
காற்று வீசியது; மீட்டும் குரல் கேட்டது. அவன் அந்தக் குரல் எங்கிருந்து வருகிறதென்று ஆராய்ந்தான்.'மெல்லி எப்படிமூங்கிலுக்குள்ளே புகுந்துகொண்டாள்? ஏன் அவள் வார்த்தை பேசாமல் வெறும் ஒலியை மாத்திரம் எழுப்புகிறாள்?'
உண்மையை அவன் உணரவில்லை. அவன் தன் உள்ளத்தே மெல்லியை வைத்தவன். உலகம் முழுவதும் அவனுக்கு மெல்லியாகவே தோன்றியது. உண்மை இதுதான்.நன்றாக உயர்ந்திருந்த மூங்கிலில் வண்டுகள் ஆங்காங்கே துளைத்திருந்தன. காற்று வேகமாக வீசி மூங்கிலினுள்ளே புகுந்து வெளிவரும்போது இனிய ஒலி எழுப்பியது. அந்த ஒலியையே மெல்லியின் குரலாக அவன் எண்ணி ஏமாந்தான்.