பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

குமரியின் மூக்குத்தி

வாங்கிவிட்டார். தாமே மரவேலையைச் செய்யலானார். கண்ணினால் கண்டதைக் கையினால் செய்துவிடுவார்.

அவர் வீட்டில் தினமும் விருந்துதான். அவர் முருக பக்தர். 'முருகா' என்று சொல்லிக்கொண்டு யார் வந்தாலும் அவர்களுக்குச் சாப்பாடு போட்டுவிடுவார். அந்தப் பஜனை, இந்தச் சபை, இந்தக் கோயில் என்று தினந்தோறும் அவரிடம் வந்து நோட்டை நீட்டுகிறவர்களுக்கு இல்லை எண்ணாமல் ஐந்தோ பத்தோ கொடுத்து அனுப்புவார்.

அவர் வீட்டில் அடைவாகச் சமையற்காரன் யாரும் நிலைப்பதில்லை. மற்ற வேலைக்காரர்களிடம் அன்பாகப் பழகும் அவரிடம் சமையற்காரன் நிலைக்கும் ராசிமாத்திரம் இல்லை. அதற்கு இரண்டு காரணம்: ஒன்று அவர் வீட்டுக்கு யார் எப்போது வருவார் என்று தெரியாது. ராத்திரி ஒன்பது மணிக்கு ஒரு சாமியார் வருவார். அவருடன் நாலு அடியார்கள் வருவார்கள். எல்லோரும் சேர்ந்து பன்னிரண்டு மணிவரையில் திருப்புகழ் பாடுவார்கள். அதற்கு மேல் அவர்களுக்குப் பிரசாதம் கொடுக்கவேண்டும். பிரசாதம் என்றால் சுண்டல் அல்ல. புளியோதரை, வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், ததியோதனம் எல்லாம் வக்கணையாக இருக்கவேண்டும்.

மற்றொன்று : சாப்பாட்டு விஷயத்தில் நொட்டைச் சொல் சொல்வதற்குத் துரை அஞ்சமாட்டார். "இதில் உப்பு இல்லை; இதில் காரம் இல்லை; உங்கள் தாத்தா வீட்டுச் சரக்கோ? இன்னும் கொஞ்சம் தாராளமாக நெய் விடக்கூடாது?" என்று இரைவார். இந்த இரண்டு காரணங்களாலும் சமையற்காரன் சலித்துப்போய், நாலுமாசம் இருந்துவிட்டுப் போய்விடுவான்.

போனால் என்ன? அவரே சமையல் செய்வார். அவருக்குத் தெரியாத தொழிலே இல்லே! எங்தத் தொழிலும் அவருக்கு அகெளரவமானது அன்று.