பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவள் குறை

57

அவரிடம் வேலு பதினைந்து பிராயத்தில் வந்து சேர்ந்தான். அவன் பேரைக் கேட்டபோதே அவருக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று. முருக பக்தர் அல்லவா? முதலில் தோட்ட வேலை செய்தான். அவர் வீடு சின்னதும் அல்ல: பெரியதும் அல்ல. சுற்றிப் பூச்செடிகளும் காய்கறியும் போட்டிருந்தார். வேலு கொத்துவான்; தண்ணீர் பாய்ச்சுவான்; குழந்தைகளைப் பள்ளிக்கூடத்தில் கொண்டுபோய் விடுவான். எந்தச் சில்லறை வேலையையும் செய்வான்.

கடையிலிருந்து வரும் கடிதங்களை ஒழுங்குபடுத்தி வைப்பான். மேஜையைத் துடைத்துச் சுத்தமாக வைப்பான். நாளடைவில் டெலிபோனில் கூப்பிடுபவர்களுக்குப் பதில் சொல்லவும் கற்றுக்கொண்டான். அவனுக்கு இரண்டு வேளைச் சாப்பாடு கிடைக்கும்; 'காப்பித் தண்ணி' யும் உண்டு; சம்பளத்தில் பாதி கையில் கிடைக்கும்; பாக்கிப் பாதியை அவன்பேரில் பாங்கியில் போட்டிருந்தார் ராஜாராம். அவனுக்கு நன்றாக எழுதப் படிக்கத் தெரியும்; ஏழாவது வகுப்பு வரையில் வாசித்தவனாம்.

வீட்டுப் பிள்ளையைப் போல இருந்து வந்தான் வேலு. எப்போதும் நிழல் போலத் தொடர்வான். எங்கே போனாலும் ராஜாராமுக்கு அவன் மெய்காப்பாளனைப் போல இருப்பான்.

ராஜாராம் ஒரு கார் வாங்கினார். வேலுவைக் கார் ஒட்டப் பழகிக்கொள்ளச் சொன்னார். அவனையே கார் ஒட்டியாக வைத்துக்கொண்டார். இப்போது வேலுவுக்கு வயசு இருபத்தைந்து. அவரிடம் வந்து பத்து ஆண்டுகள் ஆகி விட்டன. காரை நன்றாக ஒட்டத் தெரிந்துகொண்டிருக்கிறான். சில்லறை ரிபேர்களைக்கூடச் செய்வான்.

"வேலு இப்போது பெரிய டிரைவர் ஆகிவிட்டான். ஏதாவது கம்பெனியில் வேலைக்குப் போனானானால் இரு நூறு ரூபாய் சம்பளம் கிடைக்கும்" என்பார் ராஜாராம். அவன் சிரித்துக்கொள்வான்.