பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

குமரியின் மூக்குத்தி

அவனுக்கு ஒரு பெண்டாட்டி வந்துவிட்டாள். நீங்கள் ஒவ்வொரு நாளும் பன்னிரண்டு மணி, ஒரு மணி என்று ராத்திரியில் அவனை வீட்டுக்கு அனுப்புகிறீர்கள். ஆறி அவலாய்ப் போன சாப்பாட்டை அவனுக்குப் போட வேண்டியிருக்கிறதாம்...... " இதைச் சொல்லிவிட்டு அவள் சிரித்தாள். தொடர்ந்து, "அவன் சில நாள் இங்கேயே தங்கி விடுகிறான். அங்கே சோறு வீணாகி விடுகிறதாம்” என்றாள். இப்போது ராஜாராமும் புன்னகை பூத்தார்.

இரண்டு நாள் சென்றன. ராஜாராம் வேலுவிடம், "வேலு, நானும் கார் ஒட்டக் கற்றுக்கொள்ளப் போகிறேன்" என்றார்,

"கற்றுக்கொள்ளுங்கள், எசமான். உங்களுக்கு எது தான் வராது?" என்றான் வேலு.

"அன்றைக்கு வந்தானே, சின்னசாமி, அவனைத் தினமும் ராத்திரி வரச் சொல்லியிருக்கிறேன். அவன் கற்றுத் தருவான். கொஞ்சம் பழகினால் பகல் நேரத்தில் உன்னிடம் கற்றுக்கொள்கிறேன்.”

"ஏன், நானே கற்றுத் தருகிறேனே!” என்றான் வேலு.

"பகலெல்லாம் உழைத்துவிட்டு ராத்திரியும் அகாலத்தில் உனக்கு வேலை வைக்கலாமா?"

மறுநாள் முதல் ராஜாராம் கார் ஒட்டக் கற்றுக் கொள்ளலானர். விரைவிலே கற்றுக்கொண்டார். இப்போது அவரே நன்றாக விடலானார்.

வேலுவை அருகில் வைத்துக்கொண்டு காரை அவரே ஒட்டினார். குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்குக் கொண்டு போய் விடுவது, அம்மாவைக் கோயிலுக்கு அழைத்துச் சென்று வருவது.இப்படியான காரியங்களுக்கு வேலு காரை விட்டுக்கொண்டு போய் வருவான். ராஜாராமுடன் போகும்போதெல்லாம் பெரும்பாலும் காரை அவரே ஒட்டுவார்.