பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கொள்ளையோ கொள்ளை

காட்டுக்கோட்டை ராஜாங்கம் சின்னதானாலும் கெடுபிடிக்குக் குறைவு இல்லை. ராஜா, மந்திரி, சேனாபதி, சட்டசபை எல்லாம் வக்கணையாகவே இருந்தன. சேனாபதி போலீஸ்காரர்களுக்குத் தலைவர்; சட்டசபை என்பது நகர சபையைப் போலிருக்கும். ஆனாலும் அதற்குச் சட்டசபை என்று பெயர். அதில் காட்டுக்கோட்டை ராஜ்யத்துக்குரிய சட்டங்களை இயற்றுவார்கள். ஆனல் எல்லாச் சட்டங்களுக்கும் அரசருடைய உடம்பாடு வேண்டும். அரசர் தனியே ஒரு சட்டம் செய்யவேண்டுமென்று தாமாக விரும்பினால் மூச்சுப் பேச்சு இல்லாமல் அத்தனை பேரும் கையைத் தூக்கி அந்தச் சட்டத்தை நிறைவேற்றிவிடவேண்டும். இல்லையானல் சட்டசபை முழுவதையும் கலைத்துவிடும் உரிமை அரசருக்கு இருந்தது.

எப்படியோ எல்லாச் சட்டங்களும் சட்டசபையின் மூலமாகவே நிறைவேறி வந்தன. அந்தச் சட்டசபையைப் பொம்மைச் சபை என்று கூற யாருக்குத் தைரியம் வரும்?

அரசாங்கத்தில் செலவு மிகுதியாகிவிட்டது. குடிமக்களுக்காக ஏதோ பெரிய காரியங்களைச் செய்து இந்தச் செலவு ஏற்பட்டதென்று சொல்ல முடியாது. எல்லாம் அரசருடைய சொந்தச் செலவுதான். அரசர் செளக்கியமாக இருந்தால்தானே அரசாட்சி நன்கு நடைபெறும்? மன்னனே நாட்டுக்கு உயிர் என்பது உண்மையாக இருந்தால், அவனைக் காப்பது-வேண்டிய சுகங்களைப் பெற்று வாழும்படி செய்து காப்பது-நாட்டு மக்களுக்கு உரிய கடமை என்பதும் உண்மையாகத்தானே இருக்க வேண்டும்?

குமரி-5