பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொள்ளேயோ கொள்ளை

67

"புதிய வரிகள் போடலாமா?”

"அது யோசனை செய்து, பிறகு செய்ய வேண்டியது” என்றார் மன்னர். -

'எல்லாருக்கும் வரி போடுகிறதை விடக் குறிப்பிட்ட சிலருக்குக் கணிசமாக வரி போடலாம்' என்று ஒருவர் யோசனை கூறினார்.

அப்போது சேனாபதி ஒரு நல்ல யோசனையை உந்தித் தள்ளினார். "இப்போது குற்றவாளிகளில் சிலருக்கு அபராதம் போடுகிறோம்; சிலரைச் சிறையில் தள்ளுகிறோம்; சிலருக்கு அபராதம், சிறைவாசம் என்று இரண்டும் விதிக்கிறோம். இதை மாற்றினால் வருவாய் கிடைக்க இடமுண்டு” என்றார்.

"‘எப்படி மாற்றுவது?" என்று ஆவல் தோன்றக் கேட்டார் அரசர்.

"மிக மிகப் பெரிய குற்றத்துக்குச் சிறைத்தண்டனை கொடுப்பது; மற்ற எல்லாவற்றிற்கும் அபராதமே விதிப்பது; இப்படிச் செய்தால் அபராதத்தொகை நிறையக் கிடைக்கும்” என்று சேனாபதி தம் திட்டத்தை விரித்துரைத்தார்.

"குற்றவாளிகளில் பலர் அபராதம் செலுத்த இயலாத நிலையில் இருக்கிறார்களே! அவர்களிடம் அபராதம் எப்படி வசூல் செய்வது?" என்று ஒருவர் கேள்வி கேட்டார்.

சேனாபதி அதற்கு விடை தயாராகவே வைத்திருந்தார். "அப்படிப்பட்ட ஆசாமிகளே யாரிடமாவது வேலை செய்யச் சொல்கிறது. கிடைக்கும் சம்பளத்தை அபராதத் தொகையாக வசூல் செய்கிறது" என்று அவர் சொன்னவுடன், "சபாஷ்! நல்ல யோசனை’ என்று அரசர் ஆமோதித்தார், அதற்குமேல் தடைகூற அங்கே யாருக்கும் துணிவில்லை.

"திருடர்களிடங்கூட அபராதம் வசூலித்துவிடுவதா? என்று அரசர் கேட்டார்.