பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

குமரியின் மூக்குத்தி

"ஆம், அதுதான் முக்கியம். திருடிய பொருளிலிருந்து எளிதில் அபராதம் செலுத்திவிடுவார்கள். திருட்டுக் கொடுத்தவர் சொல்லும் செய்தியை வைத்துக்கொண்டு நூற்றுக்கு இவ்வளவு என்று அபராதம் போடலாம்."

"பலே! அபராதம் வசூலிக்கும் கடமை உங்கள் தலையில்தான் விழும் என்பதை நினைத்துப் பார்த்தீர்களா?

"அதனால்தான் இத்தனை தைரியத்தோடு பேசுகிறேன். எப்படியாவது பணத்தை வசூலிக்க முடியும்; மகாராஜா உத்தரவு கோடுத்தால் போதும்." .

"மகாராஜாவா! எல்லாம் சட்டசபையின் மூலமே வரட்டும்."

சட்டசபையில் ஒரு புதிய சட்டம் எழுந்தது. 'அரசருடைய தனி அநுமதியின்றி எந்தக் குற்றத்துக்கும் சிறைத் தண்டனை விதிக்கக்கூடாது; எல்லாவற்றிற்கும் அதனதன் கடுமைக்கு ஏற்றபடி அபராதம் போட வேண்டும்' என்று அந்தச் சட்டம் கூறியது.

இதனால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்று அரசியலார் எதிர்பார்த்தனர்: சிறைவாசத் தண்டனை மிகமிகக் குறைந்துவிடுவதனால் சிறைகளையும் சிறைப்பட்டோர்களையும் பாதுகாக்கும் செலவு குறைந்துபோகும்; முன்னையிலும் அதிகமாக அபராதத் தொகை அரசாங்க பொக்கிஷத்திலே சேரும்.

சட்டம் வந்த முதல் மாதத்தில் அரசாங்க வருவாய் முன்னையினும் இருமடங்கு ஆயிற்று. அபராதம் செலுத்த இயலாதவர்களை முதலில் அரசாங்க வேலையில் வைத்துக் கொண்டு அபராதத் தொகையை ஈடு செய்தார்கள். 'குற்றவாளிகளை வேலைக்கு வைத்துக்கொள்ளலாமா? அவர்கள் ஒழுங்காக வேலை. செய்வார்களா?' என்ற கேள்விகளைச் சட்டசபையிலே கேட்க எதிர்க்கட்சி என்ற ஒன்று அந்த அரசாங்கத்தில் இல்லை.